13 வயது சிறுமி கர்ப்பமானதால் பரபரப்பு.. வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக வளர்ப்பு தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பிதிரெட்டி கிராமத்தின் இருளர் காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். அதே காலனியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டதால் அந்த பெண்ணை மணி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என 4 குழந்தைகளும், இரண்டாவது கணவர் மணி மூலம் முன்று பெண்கள், ஒரு ஆண் என 4 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் முதல் கணவரின் இரண்டாவது மகளான 13 வயது சிறுமிக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியை அவரது தாய், கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுமியை சோதித்து பார்த்ததில் அவர் ஆறு வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்தது.
இதனால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கெலமங்கலம் வட்டார அரசு மருத்துவ அலுவலர் ராஜேஷ் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு பெண்ணின் வளர்ப்பு தந்தையான மணி தான் காரணம் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் புவனேஷ்வரி தலைமையிலான மகளிர் போலீஸார் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?