பிரேசிலில் நடந்த கோர விபத்து.. பேருந்து மீது லாரி மோதி 38 பேர் பலி
தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேசிலின் சாவ் பாலோ (Sao paulo) பகுதியில் இருந்து 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று பஹியா (Bahia) மாநிலத்தை நோக்கி சென்றது. அப்போது மினஸ் கரேஸின் (Minas Gerais) மாகாணத்தின் தியொபிலோ ஒடானி (Teofilo Otoni) பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் ஒன்று வெடித்தது.
இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஓட்டுநர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இந்த கோர விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலை விபத்தில் 38 பேர் பலியானது குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், களத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரியிலிருந்து கிரானைட் கற்கள் கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் கூடுதலாக மூன்று பயணிகளுடன் கார் ஒன்று விபத்தில் சிக்கியது. ஆனால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நடப்பு ஆண்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் இந்த விபத்துக்கள் பிரேசிலின் ஆபத்தான சாலைப் பாதுகாப்பு சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.
What's Your Reaction?