பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல்.. இளம்பெண் புகார்..
பெண் வன்கொடுமை வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர் புகாரை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கீழ்க்கட்டளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் என்பவர் காதலித்து வந்தனர். பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அர்ஜூன் அந்த பெண்ணுடன் இருக்கு நெருக்கமான படங்களை தோழி ஒருவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை அறிந்து அவரிடம் அந்த பெண் கேட்டபோது தகராறு ஏற்பட்டது. பிறகு அந்த பெண்ணை அர்ஜூன் தாக்கியதாக தெரிகிறது. அது தொடர்பாக அந்த பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அதன்படி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் அர்ஜூன் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதையடுத்து தன்னை அவர் மிரட்டுவதாகவும், புகாரை வாபஸ் வாங்கும்படியும் மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அர்ஜூன் தன்னை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். அவருக்கு அரசியல் பிரமுகர் உதவி செய்கிறார். நான் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. காலம் கடத்தி வருவதால் தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.
என்னை தாக்கி கருவை கலைக்க வைத்ததற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். என் வழக்கில் உள்ள சாட்சியங்களையும் அர்ஜூன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். என் வீட்டிற்கு ஆட்கள் அனுப்பி அர்ஜூன் மிரட்டுகிறார். அவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






