பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்... நிம்மதி பெருமூச்சு விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தை சாதூரியமாக இயக்கி தரையிறக்கு விமானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு பிறகு மூன்றாவதாக இருக்கும் பெரிய விமான நிலையம் திருச்சி விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்திருலிருந்து தினமும் 50 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5.40 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டு சக்கரங்கள் உள்ளே செல்லாமல் சிக்கிக் கொண்டன. இதனால் விமானத்தை திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக விமானம் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். தொடர்ந்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம், இரவு 8.15 மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் ஷார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேநேரம் ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ள விமான போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பைலட் இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல் மற்றும் கோ-பைலட் மித்ராயி ஸ்ரீ கிருஷ்ணா ஷீடல் ஆகியோருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன் எனவும் விமானிகள் மற்றும் விமானக் குழுவினருக்கும் தனது பாராட்டுகள் எனவும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், விமான பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன் எனவும் கடுமையான சமயத்தில் திறம்பட செயல்பட்டு அனைத்து பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வெள்ளிக்கிழமை மாலை ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சக்கரங்கள் உள்ளே செல்லாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானிகளின் சாமர்த்தியத்தால், வானில் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக வட்டமடித்து எரிபொருளை தீர்த்தபின்னர், மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விமானிகளின் மதிநுட்பத்தால் எந்தவித பதற்றமும் இன்றி தரையிரங்கியதாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், 108 பயணிகள் திருச்சியில் இருந்து மாற்று விமானம் மூலம் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 36 பேர் தங்களின் பயணத்தை தள்ளி வைத்த நிலையில், மற்றும் சிலர் பயணத்தை ரத்துசெய்துவிட்டு ஏர் இந்தியாவிடம் இருந்து பயணத்தொகையைப் திரும்ப பெற்றுக் கொண்டனர்.
What's Your Reaction?