சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் மற்றும் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் சென்னை மாநகராட்சி,நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது பருவமழை முன்ஏற்பாடு பணிகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதாவது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவது, மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் உள்ளிட்ட மழைநீர் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதாக அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கடிந்து கொண்டனர்.
மேலும் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தகவல் சொல்வதில்லை எனவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டினார்கள். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடியும்? கீழ்க்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? என்று அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை என்று அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பட்டியல் தயார் செய்து வழங்க அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்த கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ''ஆய்வு கூட்டத்தில் சென்னை மாநகர பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து தெரிவித்தார்கள். 3040 கிமீ நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் பணிகள் தூர்வாரும் பணி 61% நிறைவு பெற்றுள்ளது. கூவம் பகுதிகளை தூர்வார வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தார்கள். 320 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் எவ்வளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தூர்வாரும் பணிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.