இலாகாவில் அட்ஜெஸ்ட்மென்ட் ...தலைமையின் ரகசிய அசைன்மெண்ட்? திமுகவின் தேர்தல் கணக்கு?!
தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் 3 மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் மும்முரமாக செய்து வருகின்றன. மற்றக் கட்சிகளைப்போலவே ஆளும் கட்சியான திமுக மாநிலத்தின் பிரச்னைகளை கவனிப்பது ஒரு பக்கம், மாவட்ட செயலாளர் மாற்றம், சூறாவளி சுற்றுப்பயணம், அடிக்கடி மீட்டிங் என மாவட்டங்களில் கட்சி வளர்ப்பது இன்னொரு பக்கம் என படு பிசியாக இருந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க, பிப்ரவரி 10-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடியது. அதில், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களை, அவற்றில் வசித்துவரும் மக்களுக்கே ஆறு மாதங்களுக்குள் பட்டா வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல், தொழில்துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக, அதிகாரிகளையெல்லாம் வெளியே அனுப்பி விட்டு, சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதலமைச்சர். அப்போது, தேர்தலை ஒட்டி ஒவ்வொரு மாதமும் மூன்று மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த வாக்குறுதிகளை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். தொகுதி பணிகளிலும் ஆக்டிவாக ஈடுபடவேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்த்தபடி, அதிகாரிகள் மாற்றமும் நடந்திருக்கிறது. நமக்கு டைம் இல்லை. எனவே, பெண்டிங் வேலைகளைச் சீக்கிரம் முடிங்க என்று உத்தரவு போட்டிருப்பதாக கூறப்பட்டது.
இதனால் தொகுதி வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் மாற்றத்தோடு சேர்த்து அமைச்சரவையிலும் சில மாற்றங்களை முதல்வர் செய்துள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி ஏரியாவில் செல்வாக்கை இழந்துள்ள அமைச்சர்கள் தான் பொன்முடியும், ராஜகண்ணப்பனும். இவர்கள் தொகுதியில் பல வேலைகளை பெண்டிங்கில் வைத்துள்ளதால், தலைமை இவர்கள் மேல் தனி கவனம் செலுத்தி இவர்கள் வைத்திருக்கும் இலாகா பணிகளை குறைக்க எண்ணியதாக சொல்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம வாரியத்துறையை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ததது மட்டுமல்லாமல், ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார் என்றும் தலைமை தெரிவித்துள்ளது. மேலும், முதலமைச்சரின் உத்தரவின் படி, விழுப்புரம் மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் உள்ள பெண்டிங் வேலைகளை முடித்து கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்கவைக்கவில்லை என்றால் அடுத்த ஆட்சியில் இந்த இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்வதே சந்தேகம் தான் எனவும் அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் இலாக்கா பணியின் பலு குறைந்ததாக கருதப்படும் இந்த இரு அமைச்சர்களும் தொகுதி பணிகளை சிறப்பாக செய்வார்களா? தங்களுக்கென இருந்த செல்வாக்கை மீட்டெடுத்து முதலமைச்சர் கொடுத்த அசைன்மெண்டை செய்து முடிப்பார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்..
What's Your Reaction?






