2 கோடி தொண்டர்கள்... மீண்டும் இபிஎஸ்-தான் முதல்வர்... விஜயபாஸ்கர் உறுதி!
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்பார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூரில் அதிமுக தெற்கு மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர், செல்வராஜ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவரும், தெற்கு மாவட்ட செயலாளருமான பி.கே.வைரமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்திற்கு அரிமளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கிளை செயலாளர் மற்றும் மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு கிளைச் செயலாளரும் உரையாற்றிய போது முன்னாள் அமைச்சர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து, “அதிமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு 53 ஆண்டுகளில் ஏழு முறை தமிழகத்தை ஆட்சி செய்து உள்ளது. ஆனால் திமுக கட்சி ஆரம்பித்து 75 வருடங்கள் ஆகியும் 6 முறை ஆட்சி செய்து உள்ளது. எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது 75 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கினார். தற்போது முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி முயற்சியால் அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழகத்தில் தனித்து நிற்கக்கூடிய இயக்கமாக அதிமுக திகழ்கிறது” என்று பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர், “தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார். அதிமுக கிளை செயலாளர்கள் டீக்கடைகளில் அமர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியை பற்றி பேச வேண்டும். தாலிக்கு தங்கம் ரத்து செய்தது, மகளிர் ஸ்கூட்டர் வழங்கியது ரத்து செய்தது, அம்மா உணவகம் நடத்தாமல் இருப்பது, லேப்டாப் வழங்காமல் இருப்பது உள்ளிட்டவைகளை பேச வேண்டும்” என்று உரையாற்றினார்.
What's Your Reaction?






