அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

2026 தேர்தலுக்காக ஒருங்கிணைப்பு நடந்தே ஆக வேண்டும் என்று அதிமுக மாஜிக்கள் தீவிரமாக இருக்க, அதற்கு ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Nov 11, 2024 - 20:39
Nov 11, 2024 - 21:27
 0
அதிமுக இணைவுக்கு தடைபோடும் ஆர்.பி.உதயகுமார்?.. ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த ‘மூவ்’ என்ன?

அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவை மீட்க ஒருங்கிணைப்பே ஒரே தீர்வு என அதிமுக மாஜிக்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் அறுவர் குழு எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி சந்தித்து ஒருங்கிணைப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி தரப்பு, “ஒருங்கிணைப்பா? நெவர்... நான் இருக்குற வரைக்கும் நோ ஒருங்கிணைப்பு..” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து “நீக்கப்பட்டவர்கள்... நீக்கப்பட்டவர்கள் தான்” என்று கூறியதால், வேறி வழியே இல்லாமல் எடப்பாடிக்கு எதிராகத்தான் செயல்பட்டு கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று மாஜிக்கள் முடிவெடுத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழலில், அறுவர் குழுவை தலைமை தாங்கும் மணி அண்ட் கோ, சிறுதாவூரில் சசிகலாவுடன் ரகசிய சந்திப்பை நடத்தியதோடு, ஓபிஎஸ் உடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது எடப்பாடியின் காதிற்கு சென்றதும் மணியான மாஜிக்களை அழைத்து மணிக் கணக்கில் அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

ஆனால், கட்சியின் எதிர்காலமே எங்கள் ஒரே குறிக்கோள் என்றும், ஒருங்கிணைப்பை நடத்தினால் தான் அதிமுக பலம் வாய்ந்ததாக மாறும் என்று மணியான மாஜிக்கள் சொல்லிவிட்டார்களாம். இதனால் கடும்கோபத்தில் உள்ள அதிமுக தலைமையை மேலும் கடுப்பாக்கியுள்ளது செங்கோல் கைமாறுதல் நிகழ்வு.

இப்படி அறுவர் குழுமீது அதிருப்தியில் எடப்பாடி இருக்கும் நிலையில், அறுவர் குழுவின் முயற்சிகளுக்கெல்லாம் ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, எடப்பாடி உத்தரவிட்டால் ஓபிஎஸை பொதுவெளியில் எங்குமே நடமாட முடியாத அளவுக்கு முடக்குவேன் என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளாராம். இது ஓபிஎஸ் அணியையும், அறுவர் அணியையும் அதிருப்தியாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா, தினகரன் கூட தேவையில்லை, ஓபிஎஸையாவது கட்சியில் சேர்த்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த மாஜிக்களின் கனவில் மண்ணை அள்ளிப் போடும்விதமாக ஆர்.பி.உதயகுமாரும், தென்மாவட்ட நிர்வாகிகள் பலரும் பேசி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. 

இதனால், வைத்தியரை அழைத்து ஆர்.பி.க்கு வைத்தியம் பார்க்க ஓபிஎஸ் குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, விரைவிலேயே அதிமுகவில் ஓபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow