எச்சில் எண்ணங்களை பிரதிபலிக்கும் பிறவிகள் நாங்கள் அல்ல... அமைச்சர் சேகர்பாபு பதிலடி
Sekar Babu on RB Udhayakumar Statement : மூன்றாண்டுகளாக சென்னையில் அம்மா உணவகத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம்; 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
Sekar Babu on RB Udhayakumar Statement : தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தின்(Amma Unavagam) செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கி, கட்சியின் பல முக்கியத் தலைவர்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தனது கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், `அம்மா’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் பதறும் இந்த திமுக அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கியும், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்தினர்.
அதிமுக காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று திமுகவின் புதிய ஊது குழலில் ஒன்றான சேகர்பாபு விஷத்தைக் கக்கி இருக்கிறார். இப்படி இருப்பதால் தான், இந்த நபரை ஸ்நேக் பாபு என்று மக்கள் அழைக்கிறார்கள் போலும். இவரைவிடப் பெரிய மகானுபவர்கள் எல்லாம் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து, எம்ஜிஆரால் தீய சக்தி என்று வர்ணிக்கப்பட்ட கூட்டத்தோடு சேர்ந்த பின்பும் இந்த இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை.
ஒரு சேகர்பாபு அல்ல, எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இந்த திமுக அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே சான்று” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் ஜெகநாதன் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் கண்ணோக்கு மையத்தையும், அதன் அருகில் அமைக்கப்பட உள்ள கொளத்தூர் டயாலிசிஸ் மையத்தினையும் அதனைத் தொடர்ந்து ரெட்ஹில்ஸ் சாலையில் அமைய உள்ள புதிய அங்காடி இடத்தினையும் , மக்கள் சேவை மையம் அமைய உள்ள இடத்தினையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமாருக்கு எங்கு என்ன பணி நடைபெறுகிறது என்று தெரியாது. அவர் மதுரையில் இருப்பதால் சென்னையை பற்றி தெரியாது. கொரோனா காலத்தில் அம்மா உணவகம் மூலம் முழுமையாக உணவளிக்கிறோம் என்று அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக மாநகராட்சி இடம் அனுமதி கேட்டது. ஆனால் அப்போதைய அதிமுக அனுமதி கொடுக்கவில்லை.
அதன் பிறகே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 160 நாட்கள் காலை உணவை, சொந்த செலவில் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனாவில் பணியாற்றிய மக்களுக்கும் வழங்கினார். ஆனால் கொரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியில் வந்தாரா? திட்டங்களால் நமக்கு என்ன பயன் என்று பார்க்காமல் மக்களுக்கு என்ன பயன் என்று ஆட்சி செய்து வருகிறார் தற்போதைய முதல்வர்.
நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா? கடந்த மூன்று ஆண்டுகளாக தானும், சென்னை மேயரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் அம்மா உணவகத்தில் பல்வேறு நாட்களில் ஆய்வுகளை செய்திருக்கிறோம். தனிநபர் விமர்சனம், அரசியல் நாகரிகம் அல்ல. எச்சில் எண்ணங்களை பிரதிபலிக்கும் இச்சக பிறவிகள் நாங்கள் அல்ல” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?