Jasprit Bumrah : ‘என்னை கேப்டன் ஆக்குங்கள் என சொல்ல முடியாது’ - ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்

Jasprit Bumrah : நான் அணியினரிடம் சென்று நீங்கள் என்னை கேப்டனாக்க வேண்டும் என்று சொல்ல முடியாது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

Jul 26, 2024 - 15:31
Jul 27, 2024 - 09:52
 0
Jasprit Bumrah : ‘என்னை கேப்டன் ஆக்குங்கள் என சொல்ல முடியாது’ - ஜஸ்பிரித் பும்ரா ஓபன் டாக்
வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா

Jasprit Bumrah : இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் (Rahul Dravid) முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் நிறைவுபெற்றது. ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய வீரர்களும், ராகுல் டிராவிட்டின் கைகளில் கோப்பையை வென்று கொடுத்து அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணி தேர்வில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

அதாவது சூப்பர் பார்மில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் நீக்கப்பட்டனர். குறிப்பாக, ரோகித் சர்மா ஓய்வால் இலங்கை தொடருக்கு இந்திய அணியின் அடுத்த கேப்டனாக, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக பணியாற்றிய ஹர்திக் பாண்டியா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிட்னஸ் காரணத்தைக் கூறி இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அதேபோல, உலகின் நம்பர்-1 வேகப்பந்து வீச்சாளரும், டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவரும், இந்திய அணியில் அனுபவ வீரராக திகழ்ந்து வருபவருமான ஜாஸ்பிரிட் பும்ராவும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உலா வந்தன. ஆனால், புதிய கேப்டனாக சூர்யகுமாரும், துணைக் கேப்டனாக சப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள ஜாஸ்பிரிட் பும்ரா, “நான் அணியினரிடம் சென்று, நீங்கள் என்னை கேப்டனாக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. இது எனக்கு வழங்கப்படும் ஊதியத்தின் தரத்திற்கு மேலான விஷயம். பந்து வீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் நாங்கள் பேட்டர்களை வெளியேற்ற வேண்டும். மைதானம் குறுகியதாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் பந்துகளை விளாசினாலும், நாங்கள் எப்போதும் போராட வேண்டும். பந்தை அதிகம் ஸ்விங் செய்ய எந்த கட்டுரையும் தொழில்நுட்பமும் வந்ததாக நினைவில்லை. மக்கள் பந்து வீசுவதை ரசிக்கிறார்கள்; சிக்ஸர்கள் அடிப்பதையும் ரசிக்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏனெனில் பந்து வீச்சாளர்கள் பணி கடினமானது. அவர்கள் பேட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்வதில்லை. அவர்கள் தட்டையான விக்கெட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளவில்லை. ஒரு ஆட்டத்தில் தோற்றாலும், பந்து வீச்சாளர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள். இது கடினமான பணி. அந்த வேலையைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த சவால்கள் காரணமாக, பந்துவீச்சாளர்கள் வெற்றிபெற புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். முரண்பாடுகளை எதிர்த்துப் போராடுவது உங்களை மிகவும் தைரியமாக ஆக்குகிறது, மேலும் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow