வாஷிங்டன் சுந்தர் அசத்தல்... ஜிம்பாப்வேயை மீண்டும் வீழ்த்தி இந்திய அணி அபாரம்

அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Jul 10, 2024 - 22:07
Jul 10, 2024 - 22:11
 0
வாஷிங்டன் சுந்தர் அசத்தல்... ஜிம்பாப்வேயை மீண்டும் வீழ்த்தி இந்திய அணி அபாரம்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்தனர். இதனால், சுப்மன் கில் தலைமையிலான இளம்படை ஜிம்பாப்வே தொடரில் களம் கண்டது.

ஹராரேவில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி பயங்கரமாக சொதப்பியது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களே எடுத்திருந்தபோதும், இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 102 ரன்களுக்குள் சுருண்டது. 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை. இதனை அடுத்து, ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனையடுத்து இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. அந்த போட்டியில், அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 33 பந்துகளில் அரைச்சதம் கடந்த அபிஷேக் சர்மா, அடுத்த 13 பந்துகளில் மேற்கொண்டு 50 ரன்களை சேர்த்தார். அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

ரிங்கு சிங் அவரது பங்கிற்கு 22 பந்துகளில் [5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்] 48 ரன்கள் விளாசினார். பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில், ஹராரேவில் இன்று நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஷிகந்தர் ரஸா பந்துவீச்சில் வெளியேறினார். அவரை தொடர்ந்த முந்தைய போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 10 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். 

36 பந்துகளில் அரைசதம் கடந்த சுப்மன் கில், 49 பந்துகளில் [7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதற்கிடையில், தொடக்க ஆட்டக்காரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் கொடுத்த கேட்சுகளை ஜிம்பாப்வே வீரர்கள் கோட்டைவிட்டனர். இந்த வாய்ப்பை இருவரும் பயன்படுத்திக் கொண்டனர்.

தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். வெஸ்லி மதேவெரே ஒரு ரன்னிலும், டடிவனஷே மருமனி 13 ரன்களிலும், பிரையன் பென்னட் 4 ரன்களிலும், ஷிகந்தர் ரஸா 15 ரன்களிலும், ஜோனாதன் கேம்பல் ஒரு ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணி, 7 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்தாலும், டியன் மேயர்ஸ் மற்றும் கிளைவ் மடண்டே இருவரும் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். ஒருவழியாக கிளைவ் மடண்டே, வாஷிங்டன் சுந்தரின் அபார சுழலில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. டியன் மேயர்ஸ் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow