சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு பல தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தை நீக்கியதாக சொல்லுபவர்கள், ‘ஆரியம் வழக்கொழிந்து’ உள்பட பல்வேறு வார்த்தைகளை தூக்கியது யார்?
‘திராவிடம்’ என்ற சொல்லை எடுத்ததற்கு இவ்வளவு கொந்தளிப்பவர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை உயிரற்ற நிலையில் இருப்பதற்கு கோபம் வரவில்லை. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும். வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது.
திராவிடத்தை வேண்டும் என்றே நுழைத்து விட்டு 3 சதவீதம் உள்ள பிராமணர்களை வைத்து 30 சதவீதம் திராவிடர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம் என்று தான் சொல்கிறது. ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள்.
கவர்னரை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் நாங்கள் கொந்தளித்தால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதாக பேசி வருகிறார்கள். தீபாவளிக்கு தற்காலிகமாக 1,500 மதுகடைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதை திசை திருப்பும் வகையில் ‘திராவிடம்’ விடப்பட்டது பெரிதாக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தன்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை ஆதரிப்பேன். ஏன் என்றால் அவர் என்னுடைய தம்பி” என்றார்.