புதுசா வந்த எந்த கழகத்துடனும் கூட்டணி இல்லை -அதிரடி முடிவெடுத்த வன்னியர் சங்கம்

வெற்றிக்கழகமோ அல்லது அது வியாபார கழகமோ வேறு எந்தெந்த கழகம் இருக்கிறது என்று தெரியவில்லை. புதுசு புதுசா கழகங்கள் வருது, அந்த கட்சிகளோடு கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை.

Dec 5, 2024 - 11:45
Dec 5, 2024 - 12:54
 0
புதுசா  வந்த எந்த கழகத்துடனும் கூட்டணி இல்லை -அதிரடி முடிவெடுத்த வன்னியர் சங்கம்

த.வெ.கவுடன் கூட்டணி சேருவதை நாங்கள் விரும்பவில்லை என மயிலாடுதுறையில் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் வன்னியர் சங்கம்  செயல்வீரர்கள் கூட்டம்  வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கம் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் வன்னியர்களின் பிரச்சனை குறித்து பகுதி வாரியாக பொது கூட்டங்கள் நடத்துவது குறித்தும், வன்னியர்களுக்குரிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தீவிரமான போராட்டங்கள் நடத்துவது குறித்தும், திருவண்ணாமலையில் நடைபெற உள்ள உழவர் பேரியக்க மாநாட்டிற்கு விவசாயிகளையும் வன்னிய மக்களையும் திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை பு.தா.அருள்மொழி சந்தித்தார். அப்போது, ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு, மக்களுடைய வெறுப்பு தான் காரணம். பொன்முடி மட்டும் இன்றி இந்த அரசாங்கமும் அமைச்சர்களும் செய்கிற அளவுக்கு மீறிய விளம்பரமும் அளவுக்கு மீறிய தற்பெருமையும் தான் அவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பை மூட்டுகிறது. அந்த வெறுப்பின் வெளிப்பாடு தான் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதற்கான காரணம் என்றார். சிக்கலான இந்த நேரத்தில் எங்களுடைய அமைச்சர்கள் செயல்பாடு மிக்கவர்கள் நல்ல அறிஞர்கள் என்று நாங்கள் சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு ஏற்றார் போல் அவர்களின் நடவடிக்கை இல்லை. இவர்கள் அரசாங்கம் நடத்துகிறார்களா அல்லது விளம்பர கம்பெனி நடத்துகிறார்களா என்று தெரியவில்லை.

பாமகவை பொறுத்தவரை மக்களை அணி திரட்டுவதே முக்கியம். விழிப்புணர்வு கொண்டவர்களாக மக்களை மாற்றுவது தான் எங்களது நோக்கம். இந்த அரசாங்கம் தண்ணீரை திறந்து விட்டு மழையில் நனைந்து  கிடக்கும் மக்களிடம் வேட்டியையும், சேலையையும் தருவது, அரிசி தருவது, சாப்பாடு தருவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. சாப்பாட்டுக்கு வழி இல்லாதவர்களாகவா இருக்கிறார்கள் இந்த நாட்டு மக்கள். இவர்கள் நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறார்கள். அதையெல்லாம் மாற்றி  அவர்களுக்கு நிரந்தர தீர்வு கண்டால் எவ்வளவு நல்லதாக இருக்கும் என்றார்.

மேலும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி சேர்வது குறித்த கணக்கிற்கு நாங்கள் செல்லவில்லை. வெற்றிக்கழகமோ அல்லது அது வியாபார கழகமோ வேறு எந்தெந்த கழகம் இருக்கிறது என்று தெரியவில்லை. புதுசு புதுசா கழகங்கள் வருது, அந்த கட்சிகளோடு கூட்டணி சேருவதை எல்லாம் நாங்கள் விரும்பவில்லை. எங்கள் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கின்ற உணர்விலே ஒருங்கிணைக்கும் சக்தியாக நாங்கள் இப்பொழுது இருக்கின்றோம் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow