20 ஆயிரம் பேருக்கு வேலையா?: ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

Nov 16, 2024 - 23:02
Nov 16, 2024 - 23:13
 0
20 ஆயிரம் பேருக்கு வேலையா?: ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து,  70.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில்,70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும், 103.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக அரியலூரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டங்களின் செயல்பாட்டை தானே முன்நின்று கவனிக்கிறேன்.  திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைத்த பலன் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில்,  உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,  “ ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறது திமுக அரசு. அதன் வரிசையில் இன்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ. 1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதலமைச்சர் பெருமைப்பட்டிருக்கிறார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ. 2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த திமுக அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ. 6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி ஆண்டுகள் இரண்டு ஆகின்றன. வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இது போன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow