ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு
கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவை மாநகர திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவர் மீது தொடர்ச்சியான புகார்கள் எழுந்த நிலையில், தலைமை அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்கள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக எளிய பின்புலத்தில் இருந்து வந்த கல்பனாவுக்கு மேயர் பதவியை பெற்றுத் தந்ததாகவும், ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, கல்பனாவின் கணவர் ஆனந்த குமாரின் தலையிடல் மாநகராட்சியில் அதிகளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன், தனது பதவியை ராஜினாமா செய்தார். 55 வார்டுகள் உள்ள நெல்லை மாநகராட்சியில் 51 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். ஆனாலும், கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம், நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்தே சொந்த கட்சிக்குள்ளாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த களேபரங்கள் ஓய்வதற்குள் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, 33 கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ள சம்பவம் திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக, திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி பதவி ஏற்ற பின், ஓராண்டு மட்டுமே மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே சுமுகமான போக்கு நிலவியது. அடுத்து வந்த மாதங்களில், திமுக கவுன்சிலர்கள் தனித்தனி அணிகளாக பிரிந்தனர்.
மகாலட்சுமி மீது அதிமுக மட்டுமல்லாமல், திமுக - காங்., என, 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். அவரது கணவரான இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜின் தலையீடே அதற்கு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐஜியை மாற்றினால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து விடாது.. நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்க முடியும். இன்றைக்கு காவல்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வகித்து வருகிறார். சரியான முறையில் திறமையாக செயல்படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும்.
பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது. அதனால் முழுமையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற நிலை இல்லை. அதனால் காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது” என தெரிவித்தார்.
திமுகவின் கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் தான் தெரியும். எல்லாம் உட்கட்சி பிரச்சினை; பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று நினைக்கிறேன். அவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. இங்கு மட்டும் இல்லை, காஞ்சிபுரத்திலும் இவ்வாறு தான் இருந்து வருகிறது என்றார்.
What's Your Reaction?