காவல்துறை மீது கோபம் உள்ளது; பழிவாங்க மாட்டோம் - அண்ணாமலை

திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம்; பழி வாங்க மாட்டோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Jul 9, 2024 - 01:39
Jul 9, 2024 - 16:27
 0
காவல்துறை மீது கோபம் உள்ளது; பழிவாங்க மாட்டோம் - அண்ணாமலை
ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை

பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரம் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக 20 ஆண்டுகள் இருந்தவர். தமிழகத்தில் இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு நடைபெற்றது இல்லை. நடந்திருக்க கூடாது. ஒரு அரசியல் கட்சி தலைவர் சென்னையில் கூலிப்படையினால் படுகொலை செய்யப்படுவது இதுவே முதல்முறை.

நேற்று பாஜக தலைவர்கள் தொண்டர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தேசிய தலைவர் நட்டா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் இது குறித்து கேட்டறிந்தார்கள். நான் இலங்கைக்கு ரா.சம்மந்தம் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்ததால் இன்று சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நாளை காலை 11 மணியளவில் இது தொடர்பாக டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையிலான பாஜக மூத்த தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாளை சந்திக்க உள்ளனர்.

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து வேங்கை வயல் முதல் ஆம்ஸ்ட்ராங் கொலை வரை என 17 சம்பவங்களை பற்றி தேசிய பட்டியல் இன ஆணையம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்திடம் பாஜக சார்பில் முறையிட உள்ளோம்.

இந்த விசயத்தை சீரியசாக எடுத்துக்கொள்வோம். படுகொலைக்கு யார் காரணம்? யார் பொருள் கொடுத்துள்ளார்கள்? என்பதை கண்டுபிடிப்பது தான் முக்கியம். சென்னை கூலிப்படை தலைநகராக மாறி உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் சென்னையில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது.

முதலமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என தெரியவில்லை. சென்னையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற பிறகும் கூட முதலமைச்சர் வேகம் காட்டவில்லை. முதலமைச்சரிடம் புலி பாய்ச்சல் இதுவரை இல்லை. இன்னும் ஆமை வேகத்தில் தான் சட்டம் ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு கொலை நடந்த உடன் ஒரு பெரிய குற்றவியல் வழக்கறிஞரை தொடர்புக் கொண்டு குற்றவாளிகளை சமாதானம் செய்யக்கூறும் நிகழ்வுகள் நடக்கின்றன. காவல்துறையின் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை அடிப்படை பணிகளை வலுவாக்க வேண்டும். தோட்டாக்கள் மூலம் குற்றவாளிகளை அடக்க நினைத்தால் மீண்டும் குற்றவாளிகள் உருவாகுவார்கள்” என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற செல்வபெருந்தகையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “செல்வப் பெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு அது குறித்து தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்களுக்கு பாஜகவில் இடம் இல்லை. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

ஆருத்ரா விவகாரத்திலும் அது தொடர்பாக ஆம்ஸ்டிராங் கொலை வழக்கிலும் பாஜகவினர் தொடர்பு உள்ளதாக எழும் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்” என தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை கூறுகையில், “முதலமைச்சர் அவர்களே தார்மீக பொறுப்பேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். யார் திட்டமிட்டு மூளையாக இந்த கொலைக்கு செயல்பட்டார்கள் என்று தெரிய வரட்டும். இதில் அரசியல் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

காவல்துறை மீது பணி சுமை அதிகமாக இருக்கிறது. இப்போது இருக்கும் காவல்துறையினரை வைத்து நாம் வேலை வாங்க முடியாது. அவர்கள் குற்றத்தை மட்டும் கவனிப்பதில்லை. பல்வேறு வேலைகள் காவலர்களுக்கு கொடுக்கப்படுகிறது. முன்பு இருந்த காவல்துறை என்பது அவர்களுக்கு ஒரு குற்றவாளியை பற்றி அனைத்தும் தெரியும். ஆனால் புதிதாக வருபவர்களுக்கு அந்த விவரம் தெரிவதில்லை. நல்ல காவல் அதிகாரிகளை அரசியல் படுத்தாமல்  ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் அரசியல் அழுத்தம் கொடுக்கக் கூடாது.

திமுகவின் கைபாவையாகவே சில காவலர்கள் மாறிவிட்டார்கள். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் வரும் போது திருத்தம் செய்ய பாப்போம். பழி வாங்க மாட்டோம். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 8 முதல் 9 கொலைகள் நடைபெற்று உள்ளது. பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகத்தில் இந்த சூழல் அபாயகரமானது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow