கடவுள் இல்லை என்று சொல்லும் திமுக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவது ஏன்? கடவுளை வைத்து காய் நகர்ந்துகிறதா திமுக? முருகனுக்காக அன்று கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா? இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
Palani Muthamizh Murugan Maanadu 2024 : அறுபடை வீடுகளில் அலைமோதும் கூட்டம், அதிகாலையில் எழுந்ததும் கந்தனின் பாட்டு, பக்தி கலந்த இன்ஸ்டா ரீல்ஸ் என தற்போது மேலோகம், பூலோகம் மட்டுமல்லாது இணையத்தளத்திலும் கூட ட்ரெண்டாகி வரும் ஒரு கடவுள் என்றால் அது நம் தமிழ் கடவுள் முருகன் தான். இப்படி தமிழ்நாட்டில் உள்ள பலர் மனங்களில் குடிகொண்டுள்ள முருகப்பெருமான், கடவுள் இல்லை என்று சொல்லும் திமுகவையும் விட்டுவிக்கவில்லை என்றால் மிகையாகாது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று (ஆகஸ்ட் 24) மற்றும் 25ம் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெகிறது.
இந்த மாநாட்டில் ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் பங்கேற்கின்றனர். ஒருபுறம் திமுகவில் சந்தனமும் விபூதியும் மனக்க, மறுபுறம் கட்சியின் ஆதாயத்திற்காக முருகனையே திமுக பயன்படுத்திக்கொள்கிறது என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.
தமிழ்நாட்டு அரசியலும், முருகனும்:
ராமர் கோயில் அரசியல் தான் மத்தியில் பாரதிய ஜனதாவுக்கு கைகொடுத்ததாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் முருக பக்தியை தேடி தேடி பறைசாற்றுகிறது திமுக. காரணம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முருகக் கடவுளை தனது முன்னோராவும், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் பார்க்கின்றனர். குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என பிரிக்கப்பட்டாலும், தமிழ்நாடு முழுவதையும் தனது அறுபடை வீடுகளை கொண்டு ஆள்கிறார் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருக பெருமான்.
தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து யாத்திரை செல்வதோ, கொண்டாடுவதோ அரசியல் கட்சிகளுக்கு புதிதல்ல. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, அதாவது 2020ம் ஆண்டின் இறுதியில் அப்போதைய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை ஒன்றை நடத்தினார். அதேபோல, முப்பாட்டன் முருகன், குறிஞ்சி தந்த தலைவன், இன மூதாதை, ’தமிழ் கடவுள்’ என முருகப்பெருமானை பற்றி தொடர்ச்சியாக பேசி வரும் மற்றொரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். ஒவ்வொரு ஆண்டும் அக்கட்சி சார்பாக தைபூசம் கொண்டாடப்படுகிறது.
கலைஞரும், வேல் நடைபயணமும்:
கோயில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடது என பராசக்தி திரைப்படத்திற்காக வசனம் எழுதியிருந்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவரது இந்த சிந்தனை வசனத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செயலிலும் தென்பட்டது. அதாவது, 1982ல் திருச்செந்தூர் கோயில் வேல் காணவில்லை என்பதை அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஏற்க மறுத்தார். இதனால், கோயிலின் வேல் மீட்கப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபயணம் சென்றவர் கருணாநிதி.
கருணாநிதி மட்டுமல்லாது திமுகவின் அசைக்கமுடியாத தலைவராக இருந்தவர் அண்ணா. விநாயகர் சிலைகளை பெரியார் உடைத்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய இவர், “பிள்ளையாரையும் உடைக்கவும் மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்” என கூறியிருந்தார். இவருடைய இந்த நிலைபாட்டை அப்போது யாரும் எதிர்க்கவில்லை.
திமுகவும் முருகனும்:
இந்துக்களுக்கு எதிரானது திமுக என்ற குற்றச்சாட்டுகளுக்கு, எங்கள் கட்சியில் 90% இந்துக்களே உள்ளனர். அவரவர் கோயிலுக்கு சென்று வழிபடுவது அவரவர் வழக்கம் என்றெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தாலும், இந்து கடவுகள் குறித்து திமுக அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சு, சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் சர்ச்சைக் கருத்து போன்றைவை திமுகவுக்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. இந்துகளுக்கு எதிரான திமுக-வினரின் சர்ச்சை பேச்சுகளை பாரதிய ஜனதா ஊதி பெரிதாக்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பலரது எமோஷனாக இருக்கும் முருகப்பெருமானை எதிர்த்தால் இனி திமுகவால் வெற்றிகரமாக அரசியல் செய்யமுடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்க: மீனவர்களுக்கு தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?
மேலும், திமுகவின் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முடிந்ததும், திருவள்ளுவருக்கு அமைக்கப்பட்ட சிலை போல, முருகனுக்கும் ஒரு சிலையை திமுக எழுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.