சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி, பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க முத்தான திட்டங்களை நிறைவேற்றி இந்திய முதல்வர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தார்.
கருணாநிதி நினைவையொட்டி முதல்வர் ஸ்டாலின், இன்று காலை சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அவரது தலைமையில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுகவினர் அமைதி பேரணி சென்றனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, சென்னை மெரினாவில் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்பு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி நினைவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள கட்சி அலுவலகங்களில் கருணாநிதி திருவுருவப் படத்துக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அரசியலில் மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. மேலும் எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் திமுகவினர் கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்கள், அவரின் தலைசிறந்த பேச்சுகள் குறித்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.
மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு; அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞரின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது. கலைஞரின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது.
ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல்; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம். கலைஞர் புகழ் பரவட்டும்'' என்று கூறியுள்ளார்.