சென்னையில் ஸ்லாப் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்லாப் இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் சன்ஷேட் விழுந்து தரை தளத்தில் நின்றிருந்த சையது குலாப் (24) என்ற ஏ.சி. மெக்கானிக்கின் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கெண்டுச் சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பலனின்றி, சையது குலாப் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பட்டினப்பாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ வேலு மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயிரிழந்த குலாப் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் கட்டிடங்களை கட்டித் தரவும் கோரிக்கை வைத்தனர். கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்குவதாக எம்.எல்.ஏ வேலு வாக்குறுதி அளித்தார். மேலும் உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு இழப்பீடு தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி வாங்கி தருவதாகும் உறுதியளித்துள்ளார்.
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியதால் கலைந்து செல்லுமாறு பொதுமக்களிடம் கேட்டார். இந்த சாலை மறியல்அரை மணி நேரமாக நடைபெற்றதால் தலைமைச் செயலகத்திலிருந்து அடையார் நோக்கி வரும் வாகனங்களும் அடையாறில் இருந்து மெரினா நோக்கி செல்லும் வாகனங்களும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்றன. இதன் காரணமாக லூப் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?






