வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா.. மக்களவையில் மத்திய அரசு தாக்கல்..எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வக்பு வாரிய சட்டம் முன்னதாக கடந்த 2013ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Aug 8, 2024 - 15:36
 0
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா.. மக்களவையில் மத்திய அரசு தாக்கல்..எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
waqf act amendment bill introduced in lok sabha today

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. 

வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் 1995ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியது. தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. வக்பு வாரிய நிர்வாகக் குழுவில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமனம், பெண்களுக்கு பிரதிநிதித்துவம், வக்பு வாரியம் உரிமை கோரும் சொத்துகளை ஆய்வு செய்ய நிர்வாகக் குழு உள்ளிட்டவை இந்த சட்ட திருத்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.


இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது.
தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 

மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.ஒன்றிய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் அமைப்புக்களில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை மசோதா உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

போஹாராக்கள் மற்றும் அக்கானிகளுக்கு தனியாக அவுகாப் வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிவதாக தெரிகிறது. ஷியாக்கள், சன்னி, போஹ்ராக்கள், அக்கானிகள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை இந்த திருத்த மசோதா வழங்குகிறது.
மத்திய  அரசின் போர்டல் மற்றும் தரவுதளத்தின் மூலமாக வக்பு வாரியங்களை பதிவு செய்யும் முறையை நெறிப்படுத்துவதும் இதன் நோக்கங்களின் ஒன்றாகும். 

வக்பு வாரிய சட்டம் முன்னதாக கடந்த 2013ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியரின் உரிமைகளை பறிப்பதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இந்துக்கள்-இஸ்லாமியர்களை பிரிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்த நிலையில் லோக்சபாவில் இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியும் என்று யாராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். 

இந்த திருத்த சட்ட மசோதா மீது பேசிய திமுக எம்பி கனிமொழி, வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும் அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று விமர்சித்துள்ளார்.

இதனிடையே மக்களவையில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அதனை ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் கூட்டத்தில் அரசு விவாதிக்கும்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைகுழுவின் ஆய்வுக்கு அனுப்புவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

இந்த நிலையில் வக்பு வாரிய சட்டத் திருத்தம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். 
தமிழ்நாட்டில் சுமார் 70,000 வக்பு வாரிய சொத்துக்கள் உள்ளன. அதாவது சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவுக்கு வக்பு வாரிய சொத்துக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மசூதிகள், தர்காக்கள் உள்ளிட்ட சுமார் 7000-க்கு அதிகமான வக்பு வாரிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றை தமிழ்நாடு வக்பு வாரியம் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow