விஜய்யின் ஜனநாயகனுக்கு ஸ்கெட்ச்? கைமாறும் துப்பாக்கி... சிக்கலில் சிவகார்த்திகேயன்!
விஜய்யின் ஜனநாயகன் பொங்கல் ரிலீஸுக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சிவகார்த்திகேயனுக்கு சிக்கலாக அமைந்துள்ளது. காட்சிகள் மாறுவது போல, துப்பாக்கியும் கைமாற, தர்மசங்கடத்தில் இருக்கிறாராம் எஸ்கே. அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகும் ஜன நாயகன், அக்டோபரில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்தாண்டு தேர்தல் வருவதால், தவெக தம்பிகளுக்கு எனர்ஜி கொடுப்பதற்காக, ஜன நாயகன் ரிலீஸை தள்ளி வைத்துள்ளார் விஜய். அதன்படி, ஜன நாயகன், அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகிறது. ஏற்கனவே ஜன நாயகன் என்ற டைட்டிலுக்கு விஜய் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. அதேபோல், எப்போதும் விஜய் படத்துக்கு ஒரு வைப் & ஹைப் இருக்கும். ஆனால் ஜன நாயகன் டைட்டில் வெளியானது முதல் அதுவும் மிஸ்ஸிங் என்றே தெரிகிறது.
அதேநேரம் ஜன நாயகன் என்ற டைட்டிலுக்கு ஏற்றபடி, படத்தில் அரசியலுக்கு பஞ்சமிருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜன நாயகனை, இப்போது பொங்கல் ரேஸில் களமிறக்க தளபதி விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால், அதே பொங்கல் ரேஸில் ஏற்கனவே துண்டு போட்டு காத்திருக்கிறது பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தை, டான் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
ஜன நாயகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்தில், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தக் லைஃப் ஆக ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், This Pongal என குறிப்பிட்டு, ஃபயர் எமோஜி உட்பட இன்னும் சில எமோஜிகளை போட்டு லீட் கொடுத்திருந்தார். அப்படி அவர் கொடுத்த லீடின் படி, சிவகார்த்திகேயனின் பராசக்தியும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள், ஆகாஷ் பாஸ்கரனின் பதிவுக்கு கீழே, அவரை பங்கமாக வறுத்தெடுத்து வருகின்றனர். சிலர் மிரட்டும் தொனியில் கமெண்ட்ஸ் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
அதேநேரம், ஜன நாயகனுக்கு எதிராக பராசக்தி ரிலீஸாவதில், சிவகார்த்திகேயனுக்கு சுத்தமாக விருப்பமே இல்லையாம். ஆனால், டான் பிக்சர்ஸ் படங்களை பெரும்பாலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் ரிலீஸ் செய்கிறது. அதனால், ஜன நாயகனுக்குப் போட்டியாக, பராசக்தியை ரிலீஸ் செய்ய ரெட் ஜெயன்ட் தரப்பு தீவிரம் காட்டி வருகிறதாம். இதில் சிவகார்த்திகேயன் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்க, அது தெரியாத விஜய் ரசிகர்கள் அவரையும் போட்டு பொளந்து வருகின்றனர். கோட் படத்தில் விஜய்யிடம் இருந்து துப்பாக்கி வாங்கிய சிவகார்த்திகேயன், இப்போது அந்த துப்பாக்கியை விஜய்க்கு எதிராகவே நீட்டியிருப்பது கோலிவுட்டை ரணகளமாக்கியுள்ளது. ஆகமொத்தம் அடுத்தாண்டு பொங்கல் வின்னர் ஜன நாயகனா அல்லது பராசக்தியா? என்ற பஞ்சாயத்து இப்போது முதலே ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






