ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன

Feb 22, 2025 - 16:16
 0
ஊருக்கு மட்டும் உபதேசம்?  கதை திருட்டில் சிக்கிய ஷங்கர்  ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!
ஊருக்கு மட்டும் உபதேசம்? கதை திருட்டில் சிக்கிய ஷங்கர் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்!

அர்ஜுன் நடித்த ‘ஜென்டில்மேன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்துமே ஹை பட்ஜெட்டில் செம பிரம்மாண்டமாக வெளியாகின. ஒரு பாடலுக்காக ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பெயிண்ட் அடிப்பது, ஆயிரக்கணக்கில் டான்ஸர்களை ஆட வைத்து மிரட்டுவது, உலக அதிசயங்களை தேடிச் சென்று ஷூட் செய்வது, கம்யூட்டர் கிராபிக்ஸ் என ஷங்கர் செய்த மாயங்கள் ஏராளம். டைட்டில் கார்டு முதல், கிளைமேக்ஸ் வரை தனது படங்களை பிரம்மாண்டமாக இயக்கி மாஸ் காட்டினார் ஷங்கர்.

ஒருபக்கம் பிரம்மாண்டம் என்றால், இன்னொரு பக்கம் பொலிட்டிக்கல் ஜானரில், லஞ்சம், ஊழலுக்கு எதிராக படம் எடுப்பது தான் ஷங்கரின் வழக்கம். சமூகத்துக்கு கருத்து சொல்கிறேன் என்ற பேரில், லஞ்சம் வாங்குபவர்களையும், ஊழல் செய்பவர்களையும் எண்ணெய் சட்டியில் போட்டி பொரித்தெடுத்த ஷங்கர், சீன் பை சீன் ஊருக்கு உபதேசம் சொல்வதையே வழக்கமாக வைத்துள்ளார். லஞ்சம், ஊழல் தொடங்கி கருப்பு பணம், வரி ஏய்ப்பு என, சுற்றி சுற்றி எடுத்த கதையையே பலவிதமாக பல டைட்டில்களில் ரிலீஸ் செய்து கல்லா கட்டியதாக விமர்சனங்கள் உண்டு.

எப்போதும் நேர்மை, நாணயம் என ஒயிட் காலர் ஜென்டில்மேனாக வலம் வந்த ஷங்கர், தற்போது எந்திரன் படத்தின் கதை திருட்டு சர்ச்சையில் வசமாக சிக்கியுள்ளார். ரஜினி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான எந்திரன், பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது. இந்த கதை, தன்னுடையது என நீதிமன்றம் சென்றார் ஆரூர் தமிழ்நாடன். ஜீகிபா என்ற பெயரில் எழுதிய இந்த கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் 2007ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்த நாவலின் கதையும், எந்திரன் படத்தின் கதையும் ஒன்றாக இருந்ததால், காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் என, எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார்.               

இந்த வழக்கு குறித்து, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆய்வு செய்து. ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதைக்கும் ‘எந்திரன்’ படத்தின் கதைக்கும் உள்ள ஒற்றுமையை அறிக்கையாக சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமாக, இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியதும் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் 2022 சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் படமும் கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் கதையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதியதாக படக்குழு அறிவித்தது. ஆனால், கார்த்திக் சுப்புராஜ்ஜின் முன்னாள் உதவியாளரான செல்லமுத்து என்பவர் தான் கேம் சேஞ்சர் படத்தின் கதையை எழுதியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கேம் சேஞ்சர் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரே இப்படி செய்யலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow