#GetOutStalin VS #GetOutModi புள்ளி வைத்தது யார்? கோலமிட்டுக் கொண்டிருப்பது யார்?

தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் அரசியல் தலைவர்கள் செய்யும் ஸ்டன்டுகள் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாறி மாறி ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் திமுக மற்றும் பாஜகவினர். இந்த ஹேஷ்டேக் சேலஞ்சிற்கு தொடக்கப்புள்ளி எது? இதில் சறுக்கியது யார்? சாதித்தது யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Feb 22, 2025 - 16:21
 0
#GetOutStalin VS #GetOutModi  புள்ளி வைத்தது யார்?  கோலமிட்டுக் கொண்டிருப்பது யார்?
#GetOutStalin VS #GetOutModi புள்ளி வைத்தது யார்? கோலமிட்டுக் கொண்டிருப்பது யார்?

தமிழகத்திற்கு பட்ஜெட் ஒதுக்காதது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘Go Back Modi’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘Get out Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை தொடர்ந்து, எக்ஸ் வலைதளத்தில் #GetOutModi என்ற ஹேஸ்டேக் டிரெண்டாக்கப்பட்டது.  பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி திமுகவினர் #GetOutModi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், கரூரில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருந்தால், அவர் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லட்டும். உதயநிதி வீட்டுக்கு வெளியே, பால்டாயில் பாபு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு வருவேன், அவர் பேசும் அதே பாஷையில் நானும் பேசுவேன். அவருக்கு ஒரு உலகத் தலைவரை மதிக்கத் தெரியவில்லை. உதயநிதி ஒரு கத்துக்குட்டி” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், அண்ணாமலை போஸ்டர் ஒட்டுவதாக பேசியது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சுவரொட்டி ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? மத்திய அரசிடம் கேட்ட நிதியை வாங்கித் தருவதற்கு துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள். ஏற்கெனவே அண்ணாமலை அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வதாக கூறியிருந்தார். முடிந்தால் அவரை அண்ணா சாலை பக்கம் வரச்சொல்லுங்கள், தைரியம் இருந்தால்,” என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருந்தார். 

உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டது குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அடுத்த வாரம் சென்னைக்கு செல்லவிருக்கிறேன். சென்னைக்கு நான் எப்போது செல்கிறேனோ, அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும் என்று திமுககாரர்கள் நாளையும், தேதியையும், இடத்தையும் குறிக்கட்டும். அண்ணா சாலைக்கு நான் வருகிறேன். நீங்கள் இடத்தை மட்டும் முடிவு செய்யுங்கள். நான் தனி ஆளாக வருகிறேன். பாஜக தொண்டர்கள் யாரும் என்னுடன் வரமாட்டார்கள். நீங்கள் திமுகவின் மொத்த படையையும், மொத்த காவல் துறையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள்” என்று பதிலடி கொடுத்ததோடு, ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் தளத்தில் பதிவிடப்போகிறோம்…. யார் அதிகமாக டிரென்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம் என்று அண்ணாமலை சவால்விட்டார். 

இந்த நிலையில், அண்ணாமலை சொன்னதுபோல சரியாக பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 6 மணிக்கு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் அண்ணாமலை. 

அதில், ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டதோடு, #GetOutStalin என்ற ஹேஷ்டேகையும் பதிவு செய்திருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. GetoutModi-ஐ விட GetOutStalin என்ற ஹேஷ்டேக் அதிகளவில் டிரெண்டானது. 

உதயநிதி Vs அண்ணாமலை மோதல் என்பது, சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கை வெல்லப்போவது யார் என்பது குறித்த முடிவு பொறுத்தது என்று கமலாலய வட்டாரங்கள் கூறும் நிலையில், இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் மோதல் என்பது தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மற்ற பிரச்னைகளை மடைமாற்றிக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow