OTT Platforms : ஆபாசம், வன்முறை... ஓடிடி தளங்களுக்கு சென்சார்... ஆக்ஷனில் இறங்கிய உயர் நீதிமன்றம்!

Madurai High Court About OTT Platforms Censor : ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலைத்தொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Sep 25, 2024 - 15:10
Sep 25, 2024 - 15:20
 0
OTT Platforms : ஆபாசம், வன்முறை... ஓடிடி தளங்களுக்கு சென்சார்... ஆக்ஷனில் இறங்கிய உயர் நீதிமன்றம்!
Madurai High Court About OTT Platforms Censor

Madurai High Court About OTT Platforms Censor : இப்போதெல்லாம் திரையரங்குகளை விட ஓடிடி தளங்கள் தான் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஸ்பாட்டாக மாறிவிட்டது. உலகளவில் ஓடிடி தளங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கின் போது சினிமா ரசிகர்களுக்கான போதி மரமாக இருந்தது ஓடிடி மட்டுமே. ஒருகட்டத்தில் சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம் போன்ற மிக முக்கியமான தமிழ்ப் படங்கள் கூட நேரடியாக ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. அதன்தொடர்ச்சியாக வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் வெப் சீரிஸ்கள் அதிகளவில் ஓடிடியில் ரிலீஸாகத் தொடங்கின. 

இந்தியாவில் ஓடிடி ஆரம்பமான புதிதில் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் மட்டுமே ரசிகர்களிடம் ஓரளவு ரீச் ஆகின. ஆனால், இப்போது பிரபல இந்திய தொழில் நிறுவனங்களும் ஓடிடி தளங்களில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டன. திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் ஓரிரு மாதங்களிலேயே ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகின்றன. இதனால் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதை கூட ரசிகர்கள் சிலர் விரும்புவதில்லை. ஓடிடியில் வெளியாகும் போது பார்த்துக்கொள்ளலாம் என காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். அதேநேரம் ஓடிடி தளங்களில் ஆபாசம், வன்முறை அதிகம் இருப்பதாக விமர்சனங்களும் எழாமல் இல்லை.

இதுகுறித்து ஏற்கனவே பலதரப்பினரும் குற்றம்சாட்டியிருந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஆதிசிவம் என்பவர், ஓடிடி தளங்களுக்கு தணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியத் திரைப்பட தணிக்கை வாரியம், ஒழுக்கம், அறம், கலாச்சாரத்தை மீறும் வகையிலான காட்சிகள், வசனங்கள் இருப்பின், அவற்றை திரைப்படத் தணிக்கை சட்டத்தின் கீழ் தணிக்கை செய்து வெளியிடும். தற்போது பல்லாயிரம் கோடி நபர்கள் தினமும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் சினிமா, வெப் சீரிஸ்கள், தொடர்கள் ஆகியவற்றில் வன்முறை, போதைப்பொருள் பயன்பாடு, ஆபாச பேச்சுக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள், பிரிவினைவாத காட்சிகள், தேசவிரோத கருத்துக்கள் போன்றவை எவ்விதமான தணிக்கையும் இன்றி ஒளிபரப்பப்படுகின்றன. 

கடந்த 2018ம் ஆண்டில் 2.4 பில்லியன் நபர்கள் OTT தளத்தை பயன்படுத்திய நிலையில், 2027 ஆம் ஆண்டில் அது 4.2 பில்லியன் ஆக உயரும் என தரவுகள் குறிப்பிடுகின்றன. OTT தளத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகளால் இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே OTT தளங்களில் வெளியாகும் சினிமா, வெப் சீரிஸ்கள், தொடர்கள் போன்றவற்றை தணிக்கை செய்து ஒழுங்குபடுத்த, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு, "வழக்கு தொடர்பாக ஒன்றிய உள்துறை செயலர், ஒன்றிய தொலைதொடர்பு துறை செயலர், ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow