“இன்னும் மாநாடே முடியல... அதுக்குள்ள இப்படியா..? பாமகவில் இணைந்த தவெகவினர்... விஜய் அதிர்ச்சி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியினர் பாமகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 26, 2024 - 22:39
 0
“இன்னும் மாநாடே முடியல... அதுக்குள்ள இப்படியா..? பாமகவில் இணைந்த தவெகவினர்... விஜய் அதிர்ச்சி!
பாமகவில் இணைந்த தவெகவினர்

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். தவெக என்ற கட்சியை தொடங்கிய அதேவேகத்தில் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்.27) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தவெக தொண்டர்கள் வி.சாலையில் குவிந்து வருகின்றனர். இதனால் விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது.

தவெகவின் முதல் மாநில மாநாடு என்பதோடு, இதில் தான் கட்சியின் கொள்கை குறித்தும் விளக்கம் கொடுக்கவுள்ளார், அக்கட்சியின் தலைவர் விஜய். அதன்பின்னரே விஜய்யின் அரசியல் பாதை எதுவென்பது தெரியவரும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 6 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தவிர ஏராளமான பவுன்சர்களும் பாதுகாப்பு பணிகளுக்காக வர வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முடியும் முன்னேரே அக்கட்சியில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனால் விஜய் மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகத்தினரே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். முதல் மாநாடு இன்னும் முடியவில்லை, முக்கியமாக விஜய் தலைமையில் தேர்தலே சந்திக்கவில்லை. ஆனால், அதற்குள்ளாக தவெக கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகியது, விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow