மேடையிலேயே கடுப்பான வெற்றிமாறன்.. பாதியில் பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு
’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘விடுதலை-1’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதிலும் ‘வழி நெடுக காட்டு மல்லி’ பாடல் ரசிகர்கள் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.’விடுதலை-1’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்றது.
இதையடுத்து, ‘விடுதலை’ இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் சூரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியை மையமாக வைத்து கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விடுதலை’ இரண்டாம் பாகம் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘ஒரு படம் எடுக்க நிறைய உழைப்பு தேவைப்படுகிறது. ஒருசிலர் மீது மற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் படம் உருவாகுகிறது. இப்படம் உருவாக நான்கு வருடங்களாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க வந்தவர்களுக்கு திருமணமாகி அவர்களது குழந்தை பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். எல்லோரும் இந்த பயணத்தை மனப்பூர்வமாக செய்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற ஒரு டீம் இல்லை என்றால் என்னால், இயக்குனர் என்று பெயர் வாங்க முடியாது. எல்லோரும் எனக்கு உதவி செய்கிறார்கள். இளையராஜா பத்து நிமிடத்தில் நான்கு டியூன் தயார் செய்து வைத்திருப்பார். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு பற்றி இளையராஜாவுக்கு கவலையில்லை. படத்துக்கு என்ன வேண்டுமோ அதை கொடுப்பார். அவரின் மியூசிக்கல் ஜீனியஸ் மைண்ட்டை பக்கத்தில் இருந்து பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் பணியாற்றியது என்னை தனிப்பட்ட விதத்தில் உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தது.
விஜய் சேதுபதியை எட்டு நாட்கள் நடிக்க அழைத்தேன் ஆனால், 120 நாட்கள் நடித்தார். விஜய் சேதுபதியின் ஈடுபாடு இந்த படத்துக்கு உதவியாக இருந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விடுதலை தான் வாத்தியார். படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது . முடிப்பதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். இப்படத்தின் பின்னணி இசை பணியை பார்க்க ஆசையாக உள்ளேன்’ என்று கூறினார்.
தொடர்ந்து, பேசிய அவர் நேரமின்மை காரணமாக உடன் பணியாற்றிய யாருடைய பெயரையும் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன் என்றார். அப்போது கீழே இருந்த உதவியாளர்கள், ஒருசிலர் பெயரை குறிப்பிடும் படி கூறினார்கள். இதனால் கடுப்பான வெற்றிமாறன் 'நான் யார் பெயரையும் சொல்ல விரும்பவில்லை. டீம் என்றாலே எல்லோரும் தான். எல்லோரும் சேர்ந்தது தான் டீம்’ என்று சற்று கோபமாக பேசிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.
What's Your Reaction?