'விடுதலை-2' வேறு ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது.. இளையராஜா நெகிழ்ச்சி
விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம் வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘விடுதலை-2’ திரைப்படம் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, சூரியை கதாநாயகனாக மாற்றியது வெற்றிமாறன் தான் என்று கூறினார். தொடர்ந்து, ரசிகர்களை போலவே நானும் 'விடுதலை-2' படம் பார்க்க ஆவலாக உள்ளேன். முதல் பாகத்தை பார்த்து இதேபோல தான் இரண்டாம் பாகமும் இருக்கும் என நினைக்காதீர்கள். ‘விடுதலை’ இரண்டாம் பாகம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்கிறது. இந்தத் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். காரணம் இதில் அவ்வளவு உழைப்பு இருக்கிறது.
நான் ஒரு திரைப்படத்திற்கு எப்படி பாடல்கள் இசையமைப்பேன் என்றால் இயக்குநர்கள் சூழ்நிலையை சொல்லும் பொழுது மனதில் ஒன்றும் இருக்காது வெறுமையாக இருக்கும். ஆனால் அதுவே ஆரம்பித்துவிட்டேன் என்றால் வந்து கொண்டே இருக்கும். இப்படியாக ஒரு படத்திற்கு ஆகாயத்தில் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் படத்தின் இசையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருக்கும்.
ஆனால், நான் பணியாற்றிய தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அவர்களே அனைத்தையும் எழுதிக் கொண்டு வந்துவிட்டனர். பிறகு அவர்கள் எழுதி வைத்ததில் இருந்து பாடல்களை அமைத்தேன். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படங்கள் அமைப்பது வேறு, அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இசையமைப்பது வேறு என்று கூறினார்.
What's Your Reaction?