ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

Mar 2, 2025 - 16:12
Mar 2, 2025 - 16:14
 0
ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்
ஆர்.என்.ரவி-திருமாவளவன்

தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் SC/ST பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்பு சட்ட பிரிவு 16-ஐ (4A) நடைமுறைபடுத்த வேண்டும் என்று  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், மாநில அரசுப் பணிகளில் SC/ST பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிடும் சட்ட திருத்தம் வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  தொகுதி மறு வரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறும் கட்சிகளின் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை என்றும் அதிர்ச்சிகரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியை பேச வேண்டும் என்ற பாஜகவின் கருத்திற்கு ஆதரவாக பேசுவது அந்த அரசியல் கட்சிகளின் அரசியல் ஆதாயத்திற்கு தான் என்று புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார்.

கச்சத்தீவு தொடர்பான ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு, ஆளுநர் நாடகம் ஆடுவதாகவும்,  அரசியல் செய்வதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார். திமுக கூட்டணி உடைந்து விடும் என்ற ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்பது அவருக்கே தெரியும் என்றும் பதில் அளித்தார்.

முன்னதாக ராமேஸ்வரம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தங்கச்சி மடத்தில் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன்.

நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற  1974 -ஆம் ஆண்டு  அநியாயமான ஒப்பந்தத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன.

அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள்  பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும்,  ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு  மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow