Rapido ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்.. காவல் ஆணையர் அருண் அதிரடி நடவடிக்கை
Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Rapido Driver Robbery Case : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது அமித், சாலிகிராமத்தில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குறைந்த அளவிலான வருமானம் கிடைப்பதால் பணத் தேவைக்காக இரவு நேரத்தில் கடந்த 1 மாதமாக ரேபிடோ ஓட்டுவதை அகமது வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி அகமது கீழ்பாக்கத்தில் ஒருவரை சவாரி ஏற்றிக்கொண்டு கோயம்பேடு நோக்கி சென்றபோது, நடுவே காவல்துறையினர் அகமதுவின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அகமதுவின் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக்கை காண்பித்த போது, ஆர்.சி. புக் வேறொரு பெயரில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஆர்.சி. புக் வேறொரு பெயரில் இருப்பதால் திருட்டு வண்டியாக இருக்கக்கூடும் என தெரிவித்து, 3500 ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவதாக அந்த போலீசார் அகமத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவ்வளவு பணம் இல்லை என அகமது கூறிய நிலையில் 1500 ரூபாய் கொடுத்துவிட்டு வண்டியை எடுத்துச் செல்லுமாறும் இல்லையென்றால் வண்டி பறிமுதல் செய்யப்படும் எனவும் அகமதை அந்த போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணமும் இல்லை என அகமது கூறிய நிலையில் ஜிபே-வில் இருந்த 300 ரூபாயை அந்த போலீசார் வாங்கிக் கொண்டதாகவும் அகமது வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அகமது, "ரேபிடோ ஓட்டுவதற்காக அரசு ஏலம் மூலமாக 70 ஆயிரம் கொடுத்து வண்டியை வாங்கியதாகவும், ஆனால் திருட்டு வண்டி என போலீசார் தெரிவித்த போது மனம் வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 3500 ரூபாய் பணத்தை போலீசார் லஞ்சமாக கேட்டதும், தான் கோர்ட்டில் கட்டிக்கொள்கிறேன் ரசீது போடுங்கள் என தான் தெரிவித்ததாகவும், ஆனால் பணம் தரவில்லை என்றால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் மிரட்டியதாகவும் அகமது தெரிவித்து இருந்தார்.
பணம் தன்னிடம் இல்லை என கூறியதற்கு, வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த பயணியிடம் பணம் கொடுங்கள் என கேட்டதாகவும், 300 ரூபாயை எனது ஜிபேவில் இருந்து பயணியின் அக்கவுண்டிற்கு அனுப்பி அவரிடமிருந்து நவநீதகிருஷ்ணன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பணம் அனுப்பியதாகவும் அவர் வேதனை தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க : Rapido ஓட்டுநரை மிரட்டி வழிப்பறி.. சிறப்பு உதவி ஆய்வாளரின் செயலால் வேதனை
இந்நிலையில், ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் (எண்.11863), சென்னை பெருநகர காவல், G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
ராபிடோ ஓட்டுநரிடமிருந்து Gpay மூலம் பணம் பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, ஆணையரின் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?