சென்னை மக்களை மெய் சிலிர்க்க வைத்த விமானப்படை சாகசம்... லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது.
இந்த பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். மக்கள் நின்றபடி, விமான சாகசத்தை காண்பதற்கு தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. நன்றாக சாகசங்களை பார்க்கும் வகையில் கடற்கரை மணல் பரப்புக்கு வரிசையாக செல்வதற்கு தடுப்புகள் கட்டப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிந்தன. இதனால் மக்கள் எவ்வித சிரமமும் இன்றி வரிசையாக நிற்க முடிந்தது. கூட்டத்தை ஒழுங்கு செய்யும் பணிகளில் போலீசார் ஆங்காங்கே ஈடுபட்டிருந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் நினைவுப் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்வை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியதுபோல மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்த வண்ணம் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்த்தனர். பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் விமானங்கள் வானத்தில் குட்டிக்கரணம் அடித்தபடியும், தேசிய கொடியை பறக்கவிட்டபடியும் பல சாகசங்கள் செய்தனர். இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்கள் செய்து அசத்தினர். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமில்லாமல் பணய கைதிகளை பிடிப்பது எப்படி உள்ளிட்டவையும் ராணூவ வீரர்கள் செய்து காட்டி அசத்தினர். மக்கள் கூட்டம் அலைமோதியதில் மெரினா கடற்கரையே ஸ்தம்பித்து போனது. மேலும் மெரினாவில் தொடங்கி மவுண்ட் ரோடு வரை ட்ராஃபிக் உச்சகட்டமாக இருந்தது. இதனால் பல மணி நேரம் வெயிலிலேயே மக்கள் காத்திருக்கும்படியான சூழல் உருவாகி பெரும் துன்பத்துக்கு ஆளாகினர். எழும்பூர் நீதிமன்றம் ரவுண்டானா முதல் அண்ணா சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து புதுப்பேட்டை செல்லும் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் 1 மணியளவில் இந்நிகழ்ச்சி மிக சிறப்பாக நிறைவுபெற்றது. எந்தவித பிரச்சனைகளும் இன்று மிக சுமூகமாக இந்த சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
What's Your Reaction?