மயிலாடுதுறை மாவட்டம், கூரைநாடு குருக்கல்பண்டார தெருவைச் சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் வடிவேலு (22). இவரும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருப்பக்கோன் தெருவை சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த 15 தினங்களுக்கு முன்பு கோயிலில் ஒருவரையொருவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் தொலைபேசி எண்ணை மாற்றிக்கொண்டு உள்ளனர். பின்னர், தொலைபேசி மூலம் பேசி இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுமி, காதலன் வடிவேலுவை தேடி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். பின்னர், தஞ்சாவூரிலிருந்து 17 வயது சிறுமியை இளைஞர் வடிவேலு மயிலாடுதுறையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் 17 வயது சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிறுமியை காணவில்லை என்று வழக்கு பதிந்த காவல்துறையினர் அந்த சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் வடிவேலுவின் பெற்றோர் சிறுமியையும், வடிவேலுவையும் மயிலாடுதுறையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அந்தக் காவல் நிலையம் மூலம் கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற கறம்பக்குடி போலீசார் இருவரையும் கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற குற்றத்திற்காக வடிவேலு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.