கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
Garib Kalyan Yojana Scheme Extention in Union Budget 2024 : இலவச உணவு வழங்கும் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

Garib Kalyan Yojana Scheme Extention in Union Budget 2024 : மத்திய பட்ஜெட் 2024 [Union Budget 2024] : நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்சியாக 7 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே அமைச்சர் என்ற பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றார்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 வெவ்வேறு பிரிவினர் மீது கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு, அனைத்து முக்கிய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைந்தபட்சம் 50% வழங்குவதாக அறிவித்தோம். அதன்படி பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம், [Garib Kalyan Yojana] 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வேளாண் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் துறையை டிஜிட்டல் மயமாக்க கவனம் செலுத்தப்படும் எனவும் கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கும் திட்டத்தை 5 மாநிலங்களில் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 5 ஆண்டுகளில் 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்த நிர்மலா சீதாரமான், திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேபோல, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் வரம்பு 10 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். காலக் கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உற்பத்தி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி வரை கடன் உத்தரவாதம் அளிக்க திட்டமிட்டுள்ளது என்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






