யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்? இந்தியாவிற்கு இவர்களால் ஆபத்தா?

“ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்த அமைப்பிற்கு தடை விதிக்க காரணம் என்ன? என்பதைக் கீழே பார்க்கலாம்.

Oct 11, 2024 - 12:26
 0
யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்? இந்தியாவிற்கு இவர்களால் ஆபத்தா?
யார் இந்த “ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பினர்?

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட "ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் சிலர் இருந்து கொண்டு ஆட்களை சேர்த்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு தொடர்பாக கடந்த ஜூன் மாதம் முதல் வழக்கை பதிவு செய்து தஞ்சையைச் சேர்ந்த அப்துல் ரகுமான், முஜிபுர் ரஹ்மான் (எ) முஜிபுர் ரஹ்மான் அல்தான் சாஹிப் மற்றும் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அஜீஸ் அகமது ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இதே அமைப்பு தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த இரண்டாவது வழக்கில் ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள், "ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்" அமைப்பு தொடர்பான ரகசிய அறிக்கைகள், செல்போன்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முதல் முறையாக 6 நபர்களையும், 6 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின் மீண்டும் அதே 6 நபர்களை இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஐந்து நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஃபைசுல் உசேன் (எ) ஃபைசுல் ரஹ்மான் என்ற நபரை 08-10-24 அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஃபைசுல் ரஹ்மான் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் அமீது உசேனின் சகோதரர் என்பதும் இவர் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தமிழ்நாட்டின் தலைமை பொறுப்பில் இருந்து வருவதும் தெரியவந்தது. மேலும், பைசுல் ரஹ்மான் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு பல்வேறு நாடுகளில் தொடர்பில் இருப்பது ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஃபைசுல் ரஹ்மானிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் 7 வது நபராக கைது செய்யப்பட்டுள்ள ஃபைசுல் ரஹ்மான், உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்'  அமைப்பு தொடர்பாக பிரிவினைவாத பிரச்சாரம் மேற்கொண்டதும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காஷ்மீரை விடுவிக்க பாகிஸ்தானிடம் இருந்து ராணுவ உதவியை நாடியாதாகவும், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளோடு தொடர்பிலிருந்ததும் தெரியவந்ததாக NIA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பை கட்டியெழுப்பி அதன் மூலம் இந்திய அரசைக் கவிழ்த்து 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' சித்தாந்த அமைப்பை நிறுவதற்காக பல்வேறு நாட்டிலுள்ள தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் ஃபைசுல் ரஹ்மான் தொடர்பிலிருந்து அதற்கான வேலைபாடுகளை செய்து வந்ததாகவும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபைசுல் ரஹ்மான் தான் தமிழகத்தில் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு சித்தாங்களை பரப்பி வந்ததும் அதற்காக தனது சகோதரன் ஹமீது உசைன் உள்ளிட்ட உறவினர்களை 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்புக்கு கொண்டு வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி தங்கள் பிரச்சாரத்தை பரப்பியதும், மேலும் தேர்தல் வாக்குரிமை மற்றும் வாக்களிப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களும் ரகசிய தகவல்தொடர்பு தளங்கள் மூலம் தங்களைப் பின்பற்றுபவர்களுக்கு 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்' அமைப்பு தொடர்பான கருத்துகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரப்பி வந்துள்ளது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்திய இளைஞர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து ஐ.எஸ்ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அதற்காக நிதி திரட்டலில் ஈடுப்பட்டதும் அதிகாரிகள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வகையில் இந்த 'ஹிஸ்ப்-உத் தஹ்ரிர்(HUT) என்ற தீவிரவாத அமைப்பாக  செயல்படுவதாகவும், 'கிலாபத்' கொள்கைகள் பரப்பும் வகையில் செயல்படுவதாகவும் மேலும், இந்த அமைப்பானது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரியவந்ததையடுத்து 'ஹிஸ்ப்-உத் தஹ்ரீர்' அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி, அதனை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

UAPA சட்டம் எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் என்ற அடிப்படையில் உள்ள பட்டியலில் இந்த தீவிரவாத அமைப்பை சேர்த்து அந்த சட்டத்தின் கீழ் இனிவரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தனது அரசிதழில் குறிப்பிட்ட வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow