குடியரசுத் தலைவர் மாளிகையில் 2 அரங்குகளின் பெயர் மாற்றம்.. என்ன காரணம்?
India President House Halls Renamed Reason in Tamil : குடியரசுத் தலைவர் மாளிகையில் தர்பார் ஹால் கணதந்திர மண்டபம் எனவும் அசோக் ஹால் அசோக் மண்டபம் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
India President House Halls Renamed Reason in Tamil : தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வசிக்கும் அதிகாரப்பூர்வ இல்லம் 'ராஷ்டிரபதி பவன்' என அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக விளங்கி வரும் இந்தியாவில் 'குடியரசுத் தலைவர் மாளிகை' தேசிய சின்னமாக பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளன. இதில் 190 ஏக்கரில் அழகான தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்தியாவின் ஜனநாயக மரபுகள் மற்றும் மதசார்பற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முக்கிய அரங்குகளாக வழங்கி வரும் ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகிய 2 அரங்குகளின் பெயர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன.
அதாவது தர்பார் ஹால் கணதந்திர மண்டபம் எனவும் அசோக் ஹால் அசோக் மண்டபம் எனவும் மாற்றப்பட்டுள்ளது. இந்த அரங்குகளின் பெயர்கள் மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ''குடியரசுத் தலைவரின் இல்லமாகவும், அலுவலகமாகவும் விளங்கி வரும் குடியரசுத் தலைவர் மாளிகை, நாட்டின் தேசிய சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்ந்து மக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் மாற்றப்பட்டு வருகிறது. இந்திய கலாசாரம் மற்றும் நெறிமுறைகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகை தொடந்து இருக்க வேண்டும் என முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள ‘தர்பார் ஹால்’ மற்றும் ‘அசோக் ஹால்’ ஆகிய 2 அரங்குகளை கணதந்திர மண்டபம், அசோக் மண்டபம் என பெயர் மாற்றுவதில் குடியரசுத் தலைவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். 'தர்பார்' என்ற சொல் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் நீதிமன்றங்களைக் குறிக்கிறது. இந்தியா குடியரசு நாடாக மாறியதும் இந்த பெயர் அதன் பொருத்தத்தை இழந்து விட்டது.
தர்பார் ஹால் என்பது முக்கிய விழாக்கள் நடைபெறும் இடமாகவும், தேசிய விருதுகள் வழங்கும் இடமாகவும் அமைந்துள்ளது. கணதந்திர என்ற பெயர் பழங்காலத்தில் இந்திய சமூகம் என ஆழமான கருத்து வேரூன்றி காணப்பட்டதால் இந்த பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும். இதேபோல் அசோக் ஹால் என்பது நடன அரங்காகும்.
அசோக் என்ற சொல் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டது அல்லது எந்த துன்பங்களும் இல்லாத என்பதை குறிக்கிறது. மேலும் அசோக் என்ற சொல் ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வின் சின்னமான அசோக பேரரசரையும் குறிப்பிடுகிறது. அத்துடன் இந்த வார்த்தை இந்திய மத மரபுகள் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்ட அசோக மரத்தையும் குறிக்கிறது.
அசோக் ஹாலை அசோக் மண்டபம் என மறுபெயரிடுவது மொழியில் சீரான தன்மையை கொண்டு வருவதுடன், ஆங்கிலமயமாக்கலின் தடயங்களையும் நீக்குகிறது'' என்று குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
What's Your Reaction?