தீவிர புயலாக மாறிய டானா... 14 மாவட்டங்கள்... 10 லட்சம் மக்கள்... பதற்றத்தில் ஒடிசா, மே.வங்கம்!
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: கடந்த வாரம் தொடங்கிய வடக்கிழக்குப் பருவமழையால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றது. டானா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், நாளை அதிகாலை ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்கத்திற்கு இடையே கரையை கடக்க இருக்கிறது டானா.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கேந்த்ராபாரா, ஜகத்சிங்பூர் உள்பட 14 மாவட்டங்களில் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல்படை, ஒடிசா தீயணைப்பு படை, ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
புயல் கரையை கடக்கும் பகுதிகளில், சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் என்றும், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநில அரசு தெரிவித்துள்ளது. 800 முகாம்களையும், 500 தற்காலிக முகாம்களையும் அமைத்துள்ள ஒடிசா அரசு, தேவைப்பட்டால் கூடுதல் முகாம்களை அமைப்போம் எனவும் கூறியுள்ளது. டானா புயல் இன்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த புயலால் தமிழகத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என சொல்லப்படுகிறது.
இதனிடையே, டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தா விமான நிலையம், இன்று மாலை 6 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு கடலோர வழித்தடத்தில் செல்லும் 197 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின் படி, டானா புயல் நெருங்கி வருவதால் ஒடிசா, மேற்கு வங்கத்தில் சூறைக் காற்று வீசத் தொடங்கியுள்ளதாம். இதனையடுத்து அந்த மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
What's Your Reaction?