போதைப்பொருள் கடத்தல்.. பெண் உட்பட இருவர் கைது.. போலீஸார் அதிரடி
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னையில் போதைப்பொருள் கடத்தல் மீதான நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக சென்னை யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பிடிப்பட்ட நபருக்கு தெரிந்த பெண் ஒருவர் அசாமில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா கடத்தி வந்த அப்பெண்ணையும் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம் என்பதும் தெரியவந்தது.
இதில் பாலசுப்பிரமணியன் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் போதைபொருள் கடத்தல் வழக்கும், மும்பையில் தங்கம் கடத்திய வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் கைதான பாத்திமா பேகத்திடம் அசாமில் இருந்து சாய்தீன் என்பவர் போதைப் பொருளை கொடுத்து அனுப்பி உள்ளார் என்றும் ரயில் மூலம் போதைப்பொருளை கடத்தி வரும் பாத்திமா பேகம் அதனை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு திருப்பி சென்றுவிடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சிக்கிக் கொண்ட நிலையில் கைதான இருவரிடம் இருந்தும் 705 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், ஆறு கிலோ கஞ்சா மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு 35 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. கைதான பாலசுப்பிரமணியன், பாத்திமா பேகம் ஆகியோரிடம் எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முசாபீர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சாய்தீன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
முன்பு ஒரு வழக்கில் பாலசுப்பிரமணியன் கைதாகி சிறையில் இருந்த போது திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த முசாபீர் என்பவர் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?