“நமக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க... தளபதி தான் நம்ம உயிர்..” சபதம் எடுத்த புஸ்ஸி ஆனந்த்!
தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் தவெக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது வைரலாகி வருகிறது.

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய் அரசியலிலும் களமிறங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, அதன் முதல் மாநில மாநாடு நடத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி தவெக முதல் மாநாடு, வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் தவெக மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அம்மாபாளையத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கமும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகிறது. இதில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினர். அப்போது பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அவர்களது அம்மா, அப்பா கால்களில் மட்டுமே விழ வேண்டும். வேறு யாருடைய காலிலும் விழக் கூடாது. நமக்கு உயிர், உடல், மூச்சு எல்லாமே தளபதி விஜய் தான். கட்சி பதவி என்பதை விட, தளபதி விஜய்யின் ரசிகர் என்பது தான் எப்போதும் நிலையானது என எமோஷனலாக பேசினார். அதேபோல், எனது பொதுச்செயலாளர் பதவி தலைவர் விஜய் கொடுத்தது தான், அதனால் இனிமேல் எனக்கு நிரந்தர பொதுச்செயலாளர் என்றெல்லாம் பேனர் வைக்க வேண்டாம் என அன்பு கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய புஸ்ஸி ஆனந்த், “நமக்கு அரசியல் தெரியாதுனு எல்லாரும் சொல்றாங்க... இனி நம்மல பாத்துதான் மத்தவங்க அரசியல் கத்துக்கணும்... தளபதி விஜய் நம்மள அப்படித்தான் வளர்த்துருக்கார்..” என நிர்வாகிகளுக்கு அன்புக் கட்டளையிட்டார். விஜய் கட்சித் தொடங்கிய நாள் முதலே, அவரது அரசியல் சித்தாந்தம் என்ன, கொள்கை..? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இதற்கெல்லாம் தவெக முதல் மாநாட்டில் விஜய் பேசிய பின்னர் தான் விடை கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தவெக மாநாடு மட்டுமின்றி, அரசியல் வெற்றி குறித்து புஸ்ஸி ஆனந்த் சபதம் எடுத்துள்ளது பலரது அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
What's Your Reaction?






