யாரும் இப்படி வெளிப்படையாக பேசவில்லை; விஜய் பேசி உள்ளார் - கிருஷ்ணசாமி
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாக பேசவில்லை ஆனால், விஜய் முதல் முறையாக கூட்டணியை முன் வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கோலாகலமாக நடைபெற்றது. மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், 4 மணிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை புரிந்தார்.
தொடர்ந்து மாநாட்டில் கட்சியின் கொள்கைகளும் செயல்திட்டங்களும் வாசிக்கப்பட்டன. தவெக நிர்வாகிகள் சம்பத், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் வாசித்தனர். அதன்பின்னர் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அதேபோல், விஜய்க்கு தவெக நிர்வாகி பரணி பாலாஜி பகவத் கீதை வழங்கினார். மேலும், பைபிளை ஏசுராஜனும், அரசியல் சாசனத்தை ஜிபி சுரேஷும், குர்-ஆன்-ஐ உமர் அப்துல்லாவும் வழங்கினர். பின்னர் மேடையில் தனது முதல் அரசியல் பேச்சை விஜய் பேசினார். அப்போது பேசிய விஜய், நம்முடைய செயல்பாடுகளை நம்பி சிலர் வரலாம்; அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி நம்மோடு களம் காணுபவர்களுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “வலுவான கொள்கை; கோட்பாடுகள்; அவற்றை அடைவதற்கான போராட்டங்கள்; முன் அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலகம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக் காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள். தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி - அதிகாரத்தில் அமர வைத்துள்ளது.
கொள்கை - கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை தம்பி விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.! அவருக்குப் பாராட்டுக்கள்.!!
தமிழ்நாட்டில் கடந்த 75 வருடத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்ட பொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன் வைத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நாள் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.!” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?