கூட்டணிக்கு NO...! சிங்கிளாக களமிறங்கும் தவெக...? உண்மையை உடைத்த பி.கே!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி நிலவரம் குறித்த உண்மையை வெளிப்படையாக பேசியுள்ளார் பிரசாந்த் கிஷோர். அப்படி அவர் சொன்னது என்ன? தவெக அதிமுக உடன் கூட்டணி அமைக்கிறது அல்லது தனித்து போட்டியிடுகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஓராண்டில் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தியது, முக்கிய பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தது, கூட்டணிகளில் கவனம் செலுத்துவது, களத்தில் மக்களை சந்திக்கத் தொடங்கியது, 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தை கட்சிரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்தது, 28 அணிகளை அறிவித்தது, என அரசியல் களத்தில் தீவிரமாக இருந்து வருகிறார் தவெக தலைவர் விஜய்.
தவெக மாநாட்டின் போது திமுக, பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய், அதிமுகவை சீண்டக்கூட நினைக்கவில்லை என்றே பேசப்பட்டது. இதன் விளைவாக தவெகவும் அதிமுகவும் தான் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் களம்காணப்போகிறது என அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் திடீரென அதிமுக உடனான கூட்டணிக்கு NO என தவெக தலைவர் விஜய் கூறியது பேசுபொருளானது.
இதற்கு, அதிமுக கொள்கையில் அதிகார பங்கு என்ற விஷயத்திற்கே இடமில்லை. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் விஜய் குறி வைக்கும் எதிர்கட்சி தலைவர் பதவி அல்லது முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்காது என்பதால், அதிமுகவை விஜய் ஓரம்கட்டியதாகவும் அரசியல் வட்டாரத்தில் அப்போது பேசப்பட்டது.
இதனையடுத்து அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால் நிச்சயமாக வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பதாலும், திமுகவிற்கு இது நெருக்கடியை கட்டாயம் ஏற்படுத்தும் என்றும் பி.கே. பிளான் செய்ததால் அதிமுகவிடம் அவர் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டதாக கூறப்பட்டது. மேலும் அந்த ரகசிய மீட்டிங்கில், இந்த கூட்டணி வெற்றிப்பெற்றால் தவெக இரண்டரை வருடங்களும், அதிமுக இரண்டரை வருடங்களும் பிரித்து ஆட்சி செய்யலாம் என்ற ஆப்ஃபர் முன்வைக்கப்பட்டதாக விவரமறிந்தவர்கள் கூறினர்.
இந்நிலையில், கூட்டணி குறித்தான பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக தனியார் செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் விளக்கமளித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். அதாவது, அதிமுகவுடன் தவெக கூட்டணி வைப்பதாக எழும் பேச்சுகளை தான் மறுப்பதாகவும், அதிமுக இல்லாமலும் தவெக 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்தே போட்டியிடும், இதுவே எங்களுடைய தற்போதைய முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டால், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் எனவும் பேசியுள்ளார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் கணித்தது போல் விஜய் கட்சி தனித்து போட்டியிட்டு என்னமாதிரியான ரிசல்ட்டை பெறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






