”சுள்ளான்கள எல்லாம் அடுத்த எம்ஜிஆர்-னு சொல்றாங்க..” தவெக விஜய்க்கு தக் லைஃப் கொடுத்த பிரபலம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பங்கமாக கலாய்த்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் 30 நாட்கள் கூட அரசியலில் தாக்குப்பிடிக்க மாட்டார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய், 2026 தேர்தலில் நேரடியாக போட்டியிட உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், இனி அரசியல் மட்டும் தான் தனது வேட்கை எனக் கூறியிருந்தார். விஜய்யின் இந்த முடிவு அரசியல் வட்டாரம் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட திரை பிரபலங்கள், விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக் கூறி வரவேற்பு தெரிவித்தனர். அதைவிட விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் தான் அதிகளவில் இருந்தன.
முக்கியமாக விஜய்யின் அரசியல் கொள்கை என்ன, அவர் எந்த சித்தாந்தத்தின் பின்னணியில் தேர்தலை சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர். ஒருபக்கம் விஜய் பாகவின் பி டீம் என விமர்சனங்கள் எழ, அவரோ தனது அறிக்கைகளில் தொண்டர்களை வார்த்தைக்கு வார்த்தை ‘தோழர்’ என குறிப்பிட்டு வருகிறார். அதேபோல், விநாயகர் சதுர்த்தியை கண்டுகொள்ளாத விஜய்க்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவிக்க, அதன்பின்னர் ஆயுத பூஜைக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதேநேரம் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்தினார் விஜய்.
மற்ற தலைவர்களின் பிறந்தநாள், நினைவு தினங்களில் மரியாதை செலுத்த, தனது கட்சியினரை மட்டும் அனுப்பி வைக்கும் விஜய், பெரியாருக்காக அவரே நேரில் சென்றார். இதுதான் விஜய்யின் அரசியல் கொள்கை குறித்து மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல், இனிமேல் அரசியலில் தவெக தலைவர் விஜய் தான் அடுத்த எம்ஜிஆர் என அவரது கட்சியினரே ப்ரோமோஷன் செய்யத் தொடங்கினர். இதுவும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவினர் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்த நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது தரமாக இறங்கி அடித்துள்ளார்.
சிவகாசியில் அதிமுகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜேந்திர பாலாஜி, ”மக்களை சந்தித்து அதிமுகவை ஆரம்பித்தவர், விதை போட்டவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... அவர் எங்கே இருக்கிறார்... ஆனால் இன்னைக்கு சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்.ஜி.ஆர்னு சொல்றாங்க... அவங்க நினைக்கிறதெல்லாம் ஒரு காலமும் நடக்காது. இது திராவிட பூமி... இங்கு திமுக அல்லது அதிமுக... இந்த இரண்டு கட்சிகளுக்கும் நடக்குறது போர்... இதுக்கு நடுவில் பாஜக, காங்கிரஸ் மட்டுமில்ல யார் வந்தாலும் இங்க எதுவும் முடியாது... புதிதாக வரக் கூடியவர்கள் யாரும் 30 நாட்களைக் கூட தாண்ட மாட்டார்கள்..” என பங்கமாக கலாய்த்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய்யை சுள்ளான் என மறைமுகமாக அட்டாக் செய்துள்ளது தளபதியாரின் ரசிகர்களுக்கு தக் லைஃப் சம்பவமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக புதிய அரசியல் அத்தியாயம் தொடங்க வேண்டும் என பாஜக, நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் களத்தில் இருக்க, அவர்களைப் போல விஜய்யின் தவெகவும் இருக்குமா? அல்லது அது மாறுமா என்பது மக்களின் கைகளில் உள்ளது.
What's Your Reaction?