ஆயுத பூஜைக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து... விமர்சனங்களிலிருந்து கிரேட் எஸ்கேப்!
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்று (அக். 11) ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற கருத்துகள் உலாவி வந்துகொண்டிருந்தபோது, சினிமாவை விட்டு தான் அதிரடியாக விலகி அரசியலில் முழுநேரம் ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்தார். இது திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகர், அதிக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நடிகர் இப்படி திடீரென சினிமாவைவிட்டு மொத்தமாக விலகுவது ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. இருப்பினும் அரசியலுக்கு செல்கிறார் என்ற மனதிருப்தி ரசிகர்களிடையே காணப்பட்டது.
அதன்படி முதலாக கட்சியின் பெயர் (தமிழக வெற்றிக் கழகம்), கட்சியின் உறுப்பினர் அட்டை, பின்பு கட்சிக்கொடி என ஒவ்வொன்றாக அறிமுகம் செய்தார் விஜய். இதையடுத்து வருகிற 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். அதன் ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தவெகவின் மாநாடு அன்றுதான் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக். 11) ஆயுத பூஜையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில், “தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்து வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தவெக தலைவர் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் கேரளாவின் ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது மிகவும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் விஜய் திமுகவின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் கருத்துகள் எழுந்தன. விஜய் ரசிகர்கள் சிலரே இதுகுறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இதுபோன்ற சிக்கலில் மீண்டும் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக இன்று ஆயுத பூஜைக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
What's Your Reaction?






