குலசை தசரா 8ம் நாள்: கஜலட்சுமி திருக்கோலத்தில் காட்சியளித்த அம்மன்!
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா விமர்சையாக நடைபெறும். இங்குள்ள அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது ஆகும். லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்தும் விரதமிருந்தும் அம்மனை வழிபடுவது வழக்கமாகும். இந்த நிலையில் இந்த ஆண்டிற்காக தசரா திருவிழா கடந்த அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. இந்த விழா மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரப்பட்டினத்தில்தான் தசரா திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குலசை தசராவைக்காண வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்வர். மகிஷாசுரனை முத்தாரம்மன் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாகும்.
தசராவின் மற்றொரு சிறப்பு என்னவென்று பார்த்தால் பக்தர்கள் விதவிதமாக வேடமனிந்து வீடு வீடாக சென்று தர்மம் எடுப்பதாகும். அவர்களுக்கு மக்கள் அரிசி, பணம் வழங்குவதையும் நம்மால் பார்க்க முடியும். இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து யாசகம் கேட்பதாக நினைத்து மக்கள் தர்மம் செய்து வருகிறார்கள்.
இந்த விழாவின்போது ஆண்கள் காளி வேடமணிந்து வருவதை நம்மால் பார்க்க முடியும். காளி வேடம் அணிந்தவர்களைப் பார்க்கும்போது அம்மனே நேரில் வந்ததாக நினைத்து பக்தர்கள் காணிக்கை வழங்குவது வழக்கமாகும். திருவிழாவின்போது காளி வேடம் போடுபவர்கள் 48 நாட்கள் கடுமையான விரதத்தைக் கடைபிடிப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். கொடியேற்றத்திற்கு பிறகு அவர்கள் ஊர், ஊராக செல்வதும் வழக்கமாகும்.
இந்நிலையில் திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் செல்வமும் பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
What's Your Reaction?