பரந்தூர் விவகாரம்.. அரசிற்கு லாபம் இருக்கிறது.. நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடி- விஜய் ஆதங்கம்
பரந்தூரில் விவசாயிகளை சந்தித்த விஜய், விமான நிலைய திட்டத்தில் அரசாங்கத்திற்கு லாபம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரத்து 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களைச் சேந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில் கிராமத்திற்குள் அரசியல் தலைவர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பரந்தூர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் கைவிடும்படி தவெக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
இந்த மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் நம்முடைய விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியிருந்தோம். அதை இங்கே உங்கள் முன்பு வலியுறுத்துகிறேன். இந்த பிரச்சனையில் நான் உங்களுடன் உறுதியாக நிற்பேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமான நிலையம் வரக்கூடாது என்று சொல்லவில்லை. இந்த இடத்தில் வர வேண்டாம் என்று தான் கூறுகிறேன். இதை நான் கூறவில்லை என்றால் நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கூறுவார்கள்.
சமீபத்தில் எடுத்த அறிவியல் ஆய்வில் ஒவ்வொரு வருடமும் சென்னையில் வரும் வெள்ளத்திற்கு காரணமே இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை, நீர்நிலைகளை அழித்ததுதான் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு சூழல் இருக்கும் பொழுது 90 சதவிகித விவசாய நிலங்கள், 90 சதவிகித நீர்நிலைகளை அழித்து இந்த பரந்தூர் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்று எந்த அரசு முடிவெடுத்தாலும் அது மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும்.
சமீபத்தில் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நம் மக்களோ அதேபோல் தானே பரந்தூர் மக்களும். ஆனால், அரசாங்கம் அப்படி செய்யவில்லை. ஏன்னென்றால் இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அதை நம் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்:
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எட்டு வழிச்சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாடை தானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு ஆதரவு. ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நம்புவது போன்று நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி ஆச்சே.
அதையும் மீறி விவசாயிகள் உங்களுக்கு எதிராக போராடினால் பிரச்சனை தான். இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள். விமான நிலையத்திற்கு ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசையும், மாநில அரசையும் கேட்டுக் கொள்கிறேன். வளர்ச்சி தான் மக்களை முன்னேற்றும், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை மிகவும் பாதிக்கும் என்று பேசினார்.
What's Your Reaction?