சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வரை சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் முக்கிய வழித்தடங்கள் வழியாக செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து மேடையில் பேசிய மா. சுப்பிரமணியன், இந்த பகுதி மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இந்த பேருந்து வசதி இருக்கும். கடந்த மாதம் வயது முதியவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது. அப்பொழுது அந்த முதியவர், கோட்டூர்புரத்திலிருந்து கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு மினி பஸ் ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்து இருந்தார். இந்த தகவல் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து உடனடியாக போக்குவரத்து துறை இடம் ஆலோசித்து இந்த பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோட்டூர்புரம் பறக்கும் ரயில் நிலையம் அருகில் இருந்து கோட்டூர்புரம், நந்தனம், சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலை, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை போன்ற பகுதிகள் வழியே கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை இந்த பேருந்து சென்றடைய இருக்கிறது. சைதை தொகுதியில் இருக்கிற 50 சதவீதத்திற்கும் மேலான பொதுமக்கள் கலைஞர் மருத்துவமனையை சென்றடைவதற்கு இந்த பேருந்து ஏதுவாக இருக்கும்.
கடந்த கால ஆட்சியில் சைதாப்பேட்டை தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழித்தடங்கள் மீண்டும் இந்த ஆட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. மேலும் சைதாப்பேட்டை தொகுதி மாந்தோப்பு பகுதியில் ஏற்கனவே மகளிர் உடற்பயிற்சி கூடம் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் மீண்டும் ஒரு உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
Hmpv வைரஸ் மிக மிக கட்டுக்குள் இருக்கிறது. பெரிய அளவில் பதட்டப்படவும், பயப்படவும் வேண்டாம். இது போன்ற வைரஸ்களை தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி அவசியம். நல்ல உணவு பழக்கங்களை கொண்டு வருவது, தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது பொதுவாக எல்லோருக்கும் நல்லது என்று அவர் கூறினார்.