ஆரஞ்ச் அலர்ட்.. கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட மக்களே உஷார்.. 2 நாட்களுக்கு மிக கனமழை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Jul 15, 2024 - 06:33
 0
ஆரஞ்ச் அலர்ட்.. கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட மக்களே உஷார்.. 2 நாட்களுக்கு மிக கனமழை
today weather update

சென்னை:  தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நேற்று 
அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 செமீ, சின்கோனாவில் 6 செமீ, வால்பாறை, உபாசி தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, விண்ட் வொர்த் எஸ்டேட், கோவை மாவட்டம் ஆழியார் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், பார்வூட், மேல் பவானி, கூடலூர் சந்தை, கோவை மாவட்டம் சோலையார், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தென்காசி மாவட்டம் கடனா அணை, வேலூர் ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வந்த நிலையில் நேற்று முழுவதுமே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஜூலை 15, நாளை 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow