திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதல் விமான சேவை.. துரை வைகோ எம்.பி எடுத்த முயற்சியின் முதல் வெற்றி

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதலாக வாரம் நான்கு முறை இன்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

Jul 16, 2024 - 11:38
Jul 16, 2024 - 13:59
 0
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதல் விமான சேவை.. துரை வைகோ எம்.பி எடுத்த முயற்சியின் முதல் வெற்றி
Durai Vaiko


திருச்சி: திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதலாக  வாரம் நான்கு முறை இன்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.இது அபுதாபியில் பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தியாகும்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ரூ 1112 கோடி செலவில் உருவக்கப்பட்டது. புதிய முனையத்தில் 60 வருகை கவுன்ட்டர்கள், 44 புறப்பாடு கவுன்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுன்ட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்தில் 3,480 பயணிகளை கையாள முடியும். பயணிகளுக்கும் பயணிகளுடன் வருவோருக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜ்களை பயன்படுத்தப்படுகிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17.60 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். இவர்களில் 13.50 லட்சம் பேர் சர்வதேச பயணிகள்.

இந்த நிலையில் மதிமுக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துரை வைகோ திருச்சி எம்.பி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற உடன் முதல் வேலையாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களை சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை அளித்திருந்தார்.

முதலாவதாக திருச்சி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்வதற்கு போர்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.இரண்டாவதாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு  திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதற்கு இருதரப்பு விமான விமான சேவை ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கிட வேண்டும்.

மூன்றாவதாக திருச்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கும், கொச்சினுக்கும்  நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார் துரை வைகோ.  மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக  துரை வைகோவிடம் மத்திய விமானத்துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் IAS , திருச்சி விமான நிலைய இயக்குனர், DRO ராஜலட்சுமி உள்ளிட்ட சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து கலந்துரையாடல் நிகழ்த்தினார். அதில் திருச்சி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் கூடுதல் ஓடுதளங்கள் அமைப்பதற்கு செயல்திட்டம் உருவாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார் துரை வைகோ.

எம்.பி துரை வைகோ எடுத்த முயற்சிகளின் முதல் வெற்றி செய்தியாக திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதலாக  வாரம் நான்கு முறை இன்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது என்ற தகவல் இன்று வெளியாகி உள்ளது.இது அபுதாபியில் பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தியாகும்.

பேருக்கு அறிக்கை விடாமல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போலவே எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் உளமார நின்று முழுவதுமாக முயற்சி செய்து எடுத்த காரியத்தை வெற்றிகரமாக  நடத்தி காட்டுபவராக அண்ணன் துரை வைகோ திகழ்கிறார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று மதிமுகவினர் கூறியுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தை மேலும் மேம்படுத்தி டெல்டா மற்றும் தென் பகுதி மக்கள் பயனுறும் வகையில் கூடுதல் விமான சேவைகளை  துரை வைகோ பெற்று தருவார் என்பது உறுதி என மதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow