சென்னை: தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் நேற்று அறிவித்தது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்திவாவசிய பொருட்களின் விலை உயர்வு உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம். பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு? "சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்" என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய ஸ்டாலின் அவர்களே மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!
மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட கண்டன பதிவில், ''தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 4.83% அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.6000 கோடிக்கும் கூடுதலான வருவாய் கிடைக்கும். தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பாதிப்பு ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தால் எடுக்கப்பட்டது என்று கூறி தமிழக அரசு தப்பித்து விட முடியாது. ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொம்மை அமைப்பு. தமிழ்நாடு அரசின் கண்ணசைவுக்கு ஏற்ற வகையில் செயல்படும் அமைப்பு. ஜூலை ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும் மின்கட்டண உயர்வை விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூலை 15-ஆம் நாள் அறிவித்திருப்பதிலிருந்தே இதை உணரலாம்.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் கடந்த 2022-ஆம் ஆண்டில் சுமார் ரூ.31,500 கோடிக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள் ஆகியவற்றை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும்.
ஜூலை 1-ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதை சுட்டிக்காட்டி அதை கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு.
ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.