மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்து ரீல்ஸ் வீடியோ.. பாய்ந்தது வழக்கு.. மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்!
'நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவை வெளியிடவில்லை. 15 நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் எங்களின் உடல்வலியை குறிப்பிடும் வகையிலேயே ரீல்ஸ் வெளியிட்டோம். இந்த வீடியோ மூலம் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்''
டெல்லி: இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் 'உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 2024' டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 3ம் தேதி முதல் 10 நாட்களுக்கும் மேலாக நடந்தது. இந்த தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணியும், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியும் நேற்று முன்தினம் இறுதிப்போட்டியில் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 156 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
'உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ்' தொடரில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தலைமை தாங்கினார். மேலும் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, யூசுப் பதான், இர்பான் பதான் என முன்னாள் ஸ்டார் வீரர்கள் பலர் விளையாடினார்கள்.
பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றதை முன்னாள் வீரர்கள் உற்சாக கொண்டாடினார்கள். அந்த வகையில் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டனர்.
இந்த கொண்டாட்ட வீடியோதான் இப்போது அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதாவது 'தவ்பா தவ்பா' பாடலின் பின்னணியில் இருக்கும் ரீல்ஸ் வீடியோவில், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் என 3 பேரும் கால்களை நொண்டி, நொண்டி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதுபோல் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''மாற்றுத்திறனாளிகளை கிண்டலடிக்கும் வகையில் இப்படி ரீல்ஸ் போடுவது எளிது. ஆனால் அவர்களின் வாழ்க்கையை வாழ்வது மிகவும் கடினம். நாட்டு மக்களின் செல்வாக்கு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் இப்படி நடந்து கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பொங்கியெழுந்து வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட கிரிக்கெட் வீரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மேம்பாட்டு தேசிய மையத்தின் சார்பில் டெல்லி அமர் காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய ஹர்பஜன் சிங், மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ''நாங்கள் அண்மையில் வெளியிட்ட 'தவ்பா தவ்பா' பாடலின் ரீல்ஸ் வீடியோ மீது எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்று அந்த வீடியோவை வெளியிடவில்லை. 15 நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் எங்களின் உடல்வலியை குறிப்பிடும் வகையிலேயே ரீல்ஸ் வெளியிட்டோம். இந்த வீடியோ மூலம் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் தனிப்பட்ட நபரையும், ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்கிறோம். இந்த விவகாரத்தை இத்துடன் விட்டு விடுங்கள்'' என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
What's Your Reaction?