Sri Lanka vs New Zealand Test Match : நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கலே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 305 ரன்கள் குவித்தது. கமிந்து மெண்டிஸ் சூப்பர் சதம் (114 ரன்கள்) விளாசினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். குசல் மெண்டிஸ் அதிரடி அரை சதம் (68 பந்தில் 50 ரன்கள்) அடித்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்கள் சாய்த்தனர்.
பின்பு தனது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 340 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் டாம் லாதம் (70 ரன்), டேரில் மிட்ச்செல் (57 ரன்), கனே வில்லியம்சன் (55 ரன்) ஆகிய 3 பேர் அரைசதம் விளாசினார்கள். இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்களும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்கள்.
35 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை விளையாடியது. திமுத் கருணாரத்னே (83 ரன்), தினேஷ் சண்டிமால் (61 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (50 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் அந்த அணி 309 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்தின் அஜாஸ் படேல் 6 விக்கெட்கள் சாய்த்து அசத்தினார்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. டாம் லாதம் (28), டெவோன் கான்வே (4), கனே வில்லியம்சன் (30) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் ரச்சின் ரவீந்திரா தனி ஆளாக போராடினார். ஆனாலும் டேரில் மிட்ச்செல் (8), டாம் ப்ளன்டெல் (30), க்ளென் பிலிப்ஸ் (4) ஆகியோர் இலங்கையின் சுழல் வலையில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.
தனி ஒருவனாக போராடி சூப்பர் அரை சதம் விளாசிய ரச்சின் ரவீந்திராவும் (92) இறுதியில் அவுட்டாக நியூசிலாந்தின் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. 71 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து 211 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்களும் வீழ்த்திய பிரபாத் ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.