‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’.. மீண்டும் பரபரப்பை பற்ற வைத்த திருமாவளவன்.. அதிரடி வீடியோ!
Thirumavalavan Old Video Controversy : திமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வருவது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. வெறும் கூட்டணி என்பதை தாண்டி கொள்கைரீதியாகவும் திமுக-விசிக இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் திமுகவிடம் இருந்து விசிக பிரிகிறதா? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.
Thirumavalavan Old Video Controversy : தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வென்று வரலாற்று சாதனை படைத்த திமுக, சட்டப்பேரவை தேர்தலிலும் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து சட்டப்பேரவை தேர்தல் பணிகளை திமுக தொடங்கி விட்டது. இதனால் தற்போதுள்ள கூட்டணியை சிதற விடாமல் தற்காத்துக் கொள்ள திமுக விரும்புகிறது.
திமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வருவது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. வெறும் கூட்டணி என்பதை தாண்டி கொள்கைரீதியாகவும் திமுக-விசிக இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் திமுகவிடம் இருந்து விசிக பிரிகிறதா? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது. இந்த கேள்வியை எழுப்ப முதலில் அச்சாரமிட்டது விசிக தலைவர் தொல்.திருமாவளவளவன் தான்.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவளவன், அக்டோபர் 2ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்த மது ஒழிப்பு மாநாட்டில் பாஜக, பாமக தவிர அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம்; அதிமுகவும் விரும்பினால் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய சகோதரராக விளங்கி வரும் திருமாவளவன் திடீரென திமுகவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் திமுகவின் பிரதான எதிரியாக கருதப்படும் அதிமுகவுக்கு அவர் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் பேசும் பொருளானது. ஆனால் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத திமுகவின் அமைச்சர்கள் பலர், ‘’மது ஒழிப்பு பொதுவான பிரச்சனை; இதை யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆகவே திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு திமுகவுக்கு எதிரானது அல்ல; அவர் அதிமுகவை அழைத்ததிலும் எந்த உள்நோக்கமும் கிடையாது. மது ஒழிப்பு மாநாட்டுக்கும், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டுக்கும் முடிச்சு போட வேண்டாம்’’ என்று தெரிவித்தனர்.
விவகாரம் பெரிதான நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன், ‘’மது ஒழிப்பு மாநாட்டுக்கும் கூட்டணிக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று கூறியிருந்தார். இன்று காலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ’’இது குறித்து திருமாவளவன் ஏற்கெனவே விளக்கம் அளித்து விட்டார்’’என்று கூறியிருந்தார். இதன்மூலம் இந்த விவாகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என கருதப்பட்டது.
ஆனால் 'நெருப்பு அணைந்தாலும் புகைவது நிற்கவில்லை' என்பதுபோல் ஒரு வீடியோவை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார் திருமாவளவன். அதாவது தனது ’எக்ஸ்’ தளத்தில் தான் பேசிய பழைய வீடியோ ஒன்றை திருமாவளவன் பகிர்ந்தார். '’ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் பேசுவது போல் அமைந்த அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது.
இந்த வீடியோ மூலம் திருமாவளவன் திமுகவை தாக்குவதாக நெட்டிசன்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இதனால் அந்த வீடியோவை திருமாவளவன், டெலிட் செய்தார். ஆனால் அதன்பிறகு மீண்டும் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்த அவர் 2வது முறையாக அதை டெலிட் செய்தார். பழைய வீடியோவை பகிர்ந்தது மூலம் திமுக மீதான விசிகவின் மனக்கசப்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’திருமாவளவன் வீடியோ பகிர்ந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அவரின் பேச்சு அரசியல் நிலைப்பாட்டு மட்டுமே’’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பகிர்ந்தது குறித்து திருமாவளவன் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?